தெலங்கானாவில் பிரதமர் மோடி பேச்சு: எதிர்க்கட்சிகள் விமர்சனம் ஊட்டச்சத்தை தருகின்றன

திருமலை: ‘தினமும் எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனமே எனக்கு ஊட்டச்சத்தை தருகின்றன’ என்று தெலங்கானாவில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 நாட்களாக தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம், கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு சென்ற மோடி அங்கு கெம்பேகவுடா விமான நிலையத்தின் 2வது முனையத்தை திறந்து வைத்தார். பின்னர் தமிழகம் வந்த அவர், திண்டுக்கல்லில் காந்தி கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, நேற்று அவர் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் பேகம்பேட்டை விமான நிலையம் அருகே பாஜ சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: தெலங்கானாவில் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக பாஜவினர் போராடுகின்றனர். தெலங்கானா என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த கட்சி தன்னை வளர்த்துக் கொண்டு மக்களை பின்னுக்கு தள்ளுகின்றனர். தெலங்கானாவில் விரைவில் இருளுக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது.  மாநிலத்தில் தாமரை மலரும் போது இருள் விலகி சூரிய உதயம் நிச்சயம் கிடைக்கும். முனுகோடு சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலில் பாஜவுக்கு மக்கள் ஊக்கம், உறுதி அளித்துள்ளனர். ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக ஒட்டுமொத்த தெலங்கானா அரசையும் முனுகோடு  செல்லும் விதமாக பாஜவினர் செயல்பட வைத்தீர்கள்.  தெலங்கானாவில் மக்களை சூறையாடும் யாரையும் விட்டு வைக்க மாட்டோம்.  ஊழல் வாதிகளை விட்டு வைக்கும் எண்ணமே இல்லை. எனது முதல் முன்னுரிமை மக்கள்தான். குடும்பம் அல்ல.  

ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியில் இருந்து தெலங்கானாவை காப்பாற்றுவதே எனது நோக்கம்.  என்னையோ, பாஜவையோ எவ்வளவு திட்டினாலும் பொருட்படுத்த போவதில்லை. தினமும் எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனங்கள் தான் எனக்கு ஊட்டச்சத்தை தந்து வருகின்றன. தெலங்கானா பாஜவினர் வலிமையான சக்திகள், யாருக்கும் பயப்பட மாட்டார்கள். என்னை இழிவுபடுத்த சிலர் டிஸ்னரிகளில் வார்த்தைகளை தேடுகின்றனர். என்னையும், பாஜவையும் அவமானப்படுத்தினாலும் பொறுத்துக் கொள்வேன். தெலங்கானா மக்கள் சிரமப்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டேன். கடந்த 22 வருடங்களாக என்னை சபித்து வருகிறார்கள். அந்த சாபம் என்னை மேலும் பலப்படுத்துகிறது.  

இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, பேகம்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமகுண்டம் சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமகுண்டம் உர தொழிற்சாலைக்கு சென்று  உற்பத்தியை ஆய்வு செய்து  நாட்டுக்கு அர்ப்பணித்தார். மோடியுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, பகவந்த் குபா, கரீம்நகர் எம்பி பண்டி சஞ்சய் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து, என்டிபிசியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மாலை 5.30 மணிக்கு ஐதராபாத் சென்று 6.40 மணிக்கு பேகம்பேட்டை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்றார்.

Related Stories: