யூடியூப் பார்த்து முகப்பொலிவிற்காக செங்காந்தள் கிழங்கு சாப்பிட்ட குவாரி தொழிலாளி பலி: மேலும் ஒருவர் கவலைக்கிடம்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் காட்டுகொல்லை அருகே உள்ள தனியார் கல்குவாரியில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் லோகநாதன்(25) வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகியுள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 3 நாட்களுக்கு முன், அதே குவாரியில் வேலை செய்து வந்த நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரை சேர்ந்த ரத்தினம்(45) என்பவருடன் முகம் மற்றும் உடல் பொலிவு குறித்த ஒரு  வீடியோவை யூடியூப்பில் பார்த்துள்ளார். அதில் செங்காந்தள் கிழங்கு சாப்பிட்டால் முகம் பொலிவாகும் என வந்ததை நம்பி இருவரும் குவாரி அருகே உள்ள ஒரு இடத்தில்  இருந்த செங்காந்தள் கிழங்கை பறித்து சாப்பிட்டுள்ளனர்.  

திடீரென இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் லோகநாதன் சென்னை ராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கும், ரத்தினம் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி லோகநாதன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். ரத்தினம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: