×

சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் பாஜ நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை: கட்சி வளர்ச்சி குறித்து அறிவுரை

சென்னை: சென்னையில் பாஜ நிர்வாகிகளுடன் அமித்ஷா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் வந்தார். அங்கு அவர் தமிழக பாஜவின் மையக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்கு பிறகு பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: தமிழக மக்கள் மழையை பொருட்படுத்தாமல் பிரதமர் மோடியை வரவேற்று வணக்கம் மோடி என்று டிவிட்டரில் ஹேஷ்டேக் போட்டார்கள்.

இந்தியாவில் எங்கேயுமே, எந்த ஒரு ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆகாத அளவுக்கு வணக்கம் மோடி 1.4 மில்லியன், அதாவது   14 லட்சம் டிவிட்டர் டேக் வணக்கம் மோடி என்று வரவேற்றுள்ளனர். இது ஒரு சரித்திர சாதனை. அமித்ஷா எங்களுடன் அமர்ந்து உணவு அருந்தி விட்டு சென்றுள்ளார். பாஜ கூட்டத்தில் அமித்ஷா, முழுவதுமாக பாஜவின் வளர்ச்சி. தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும். இன்னும் என்ன செய்ய வேண்டும். கட்சியின் செயல்பாடு பலன் எப்படி இருக்கிறது. பிரதமரிடம் ஏதாவது எடுத்து செல்ல வேண்டுமா என்று கேட்டார். 2024 தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசுவதற்கு நேரம் இது இல்லை. பாஜவை பொறுத்தவரை எங்கள் நிலைப்பாட்டில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கிறோம். தலைவர்கள் மாறுவார்கள். பாஜவிலும் தலைவர்கள் மாறி இருக்கிறார்கள். அதை போல அதிமுக தலைவர்கள் குறித்து தொண்டர்கள் முடிவு எடுக்க வேண்டும்.

அமித்ஷா 2014ம் ஆண்டில் இருந்து 2019 வரை தேசிய தலைவராக பணியாற்றி இருக்கிறார். செய்ய முடியாது என்று யார் சொன்னாலும், அதை செய்து முடிக்க கூடிய ஆற்றல் அமித்ஷாவுக்கு உள்ளது. அதே போல அமித்ஷா கட்சி வளர்ச்சியை பாருங்கள். தேவையில்லாமல் எந்த விஷயத்திற்குள்ளும் ெசல்லாதீர்கள் என்று அறிவுரை வழங்கினார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அமித்ஷா பிற்பகல் 3.30 மணியளவில் பாஜ அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்னை  விமான நிலையம் சென்றார். அங்கிருந்து அவர் டெல்லிக்கு  புறப்பட்டு சென்றார். ஒன்றிய உள்துறை அமித்ஷா வருகையை முன்னிட்டு  சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Amit Shah ,BJP ,D. Nagar, Chennai , Amit Shah confers with BJP executives at office in D. Nagar, Chennai: Advice on party development
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...