×

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் உள்பட 21 மாவட்டங்களில் 40,500 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது: நீரை வடியவைக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இந்த பகுதியில் நீரை வடியவைக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜயந்த் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கரூர், திருப்பூர், புதுக்கோட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 18 மழைமானி நிலையங்களில் மிக கனமழையும், பல்வேறு மாவட்டங்களில் 108 மழைமானி நிலையங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும், நிவாரண மையங்கள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். சென்னையில் நேற்று 51.95 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், 14 மழைமானி நிலையங்களில் கனமழை பதிவாகியுள்ளது. சென்னையில் 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசித்த 2,729 குடும்பங்களை சார்ந்த 4,452 பேர் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்த 68 பேர் ஒரு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதனை விரைவில் வடியவைக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நீலகிரி, ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் தேசிய பேரிடர் மீட்பு படையின் 92 வீரர்களை கொண்ட 4 குழுக்கள் அனுப்பி வைக்கவும், கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 163 வீரர்களை கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 5 குழுக்கள் தயாராக வைத்திருக்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் ஒரு சில நாட்கள் பரவலாக கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ள நிலையில் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் எனவும், உபரி நீர் வெளியேற்றும்போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

கனமழையின் காரணமாக ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும், அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். மழை நிவாரண பணிகளில் இரவு, பகல் பாராது பணியாற்றி வரும் அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டதோடு, தொடர்ந்து இதே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.



Tags : Mayiladuthurai ,Cuddalore ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin , In Tamil Nadu, 40,500 hectares of paddy crops in 21 districts including Mayiladuthurai and Cuddalore have been submerged in water due to northeast monsoon: Chief Minister M.K.Stalin has directed officials to take appropriate measures to drain the water.
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...