சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்: வாக்குசேகரிப்பு தீவிரம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. தேர்தல் விதிமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் ஜனவரி 9ம் தேதி நடத்துவது என்று தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்து அறிவித்தனர். தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர் மற்றும் 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளைய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கான பிரசாரம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது.

தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவரும் பார்கவுன்சில் உறுப்பினருமான ஜி.மோகனகிருஷ்ணன், முன்னாள் தலைவரும் தற்போதைய பார்கவுன்சில் உறுப்பினருமான ஆர்.சி.பால்கனகராஜ், முன்னாள் செயலாளரும் தற்போதைய பார்கவுன்சில் உறுப்பினருமான எம்.வேல்முருகன், சத்தியபால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு அப்துல்ரஹ்மான், அறிவழகன், முரளி, கோபால் உள்ளிட்டோரும் செயலாளர் பதவிக்கு கிருஷ்ணகுமார், காமராஜ் உள்ளிட்டோரும், பொருளாளருக்கு ராஜேஷ், ஆனந்த், தாரா, கே.கே.சிவகுமார் உள்ளிட்டோரும் போட்டியிடுகிறார்கள். நூலகர் பதவிக்கு விஜயராஜ், ரகு, இளையராஜா, பழனி உள்ளிட்டோரும் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் வாக்குசேகரிப்பில் இலவச பொருட்கள், துண்டு பிரசுரம் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளதால் போட்டியாளர்கள் வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால், உயர் நீதிமன்ற வளாகம் கடந்த ஒருவாரமாக பரபரப்பாக காணப்படுகிறது.

Related Stories: