×

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கிய ஒன்றிய அரசு நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை கோரி வழக்கு: ஒன்றிய, தமிழக அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு தரம் குறைந்த பொருட்களை சப்ளை செய்த நிறுவனத்திற்கே, ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு சப்ளை செய்யும் உள் ஒப்பந்தம் வழங்கிய ஒன்றிய அரசு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக 14 ஆயிரத்து 614 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதற்காக ஒன்றிய அரசின் தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்புடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கு தரம் குறைந்த பொருட்களை சப்ளை செய்த கேந்திரிய பந்தர் என்ற நிறுவனத்துக்கு தேசிய வேளாண் விற்பனை கூட்டமைப்பு உள் ஒப்பந்தம் வழங்கியது.

இதை எதிர்த்தும், ஒன்றிய அரசு நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும்,  சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தேசிய வேளாண் பொருள் விற்பனை கூட்டமைப்பு மற்றும் கேந்திரிய பந்தர் நிறுவனங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சப்ளை செய்த பருப்பை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கிட்டங்கிகளில் உள்ள பருப்பின்  மாதிரிகளை சேகரித்து அரசு ஆய்வகங்களில் தர பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி ஒன்றிய அரசு மற்றும் தமிழக  அரசுகளுக்கு உத்தரவிட்டார்.



Tags : Union Govt ,Union ,Tamil Nadu , Case seeking action against Union Govt for providing substandard items in Pongal gift package: Union, Tamil Nadu Govts Court order to answer
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!