×

மழைக்கால சிறப்பு பணியில் 11,000 பேர் தமிழகத்தில் சீரான மின் சப்ளை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: மழைக்கால சிறப்பு பணிக்காக 11,000 பேர் களப்பணியில் இருப்பதால் தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் உள்ள மாநில மின் சுமை கண்காணிப்பு மையத்தை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மேலாண்மை இயக்குநர் மணிவண்ணன், இயக்குநர் (பகிர்மானம்) சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையை பொறுத்தவரைக்கும் மின் விநியோகத்தில் மொத்தம் 1,834 பீடர்கள் இருக்கிறது.

அதில் 18 பீடர்கள் மட்டும் டிரிப் ஆனது. மழையினால் பாதிப்புகள் ஏற்பட்டது. அதற்கு உடனடியாக பேக் பீடிங் மூலமாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த 18 பீடர்களையும் சரிசெய்யயும் பணி தற்போது நடந்து வருகிறது. எந்தவிதத்திலும் சென்னையில் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை. மழைக்கால சிறப்பு பணிக்காக 11,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு களப்பணியாற்றி வருகின்றனர். 1,040 பணியாளர்கள் பகலிலும், 600 பணியாளர்கள் இரவிலும் பணிபுரிந்து, மின் விநியோகத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். சென்னையில் ஏறத்தாழ மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ்கள் 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன.

சென்னையில், மாநகராட்சி நிர்வாகம் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க மிகச் சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளது. மின் விநியோகத்தை பொறுத்தவரைக்கும் இன்னும் சென்னையில் விடுபட்ட இடங்களில் பில்லர் பாக்ஸ்கள் மழையால் பாதிப்பு இல்லாத இடங்களில் கூட 1 மீட்டர் அளவிற்கு உயர்த்தப்படும். அதிகமான மழை பெய்துள்ள பகுதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

நேற்று (நேற்று முன்தினம்) சராசரி அளவு எடுத்துக் கொண்டால் 11,200 மெகாவாட் அளவு தான் தமிழ்நாட்டின் மின் தேவையாக இருந்துள்ளது, நேற்று காலையில் 11,600 மெகா வாட் தான் தேவை இருந்தது. மழை காரணமாக நமது தேவை குறைந்துள்ளது. தற்போது, சோலார் உற்பத்தியில் 1,400 மெகவாட் அளவிற்கு உள்ளது. செலவினம் கூடும் என்பதால் அனல் மின் நிலைய உற்பத்தியை குறைத்து, சோலார் மற்றும் ஹைட்ரோ உற்பத்தியை முழுவதுமாக பயன்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister ,Senthil Balaji , 11,000 people on special monsoon duty for steady power supply in Tamil Nadu: Minister Senthil Balaji
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட...