×

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கு பின் நளினி உள்பட 6 பேர் விடுதலை: காட்பாடி உறவினர் வீட்டுக்கு திரும்பிய நளினி

சென்னை: உச்சநீதிமன்றம் வழங்கிய விடுதலை தீர்ப்புக்கு பின்னர் வேலூர் சிறைகளில் இருந்து முருகன், நளினி, சாந்தன் ஆகிய 3 பேரும் புழல், மதுரை சிறைகளில் இருந்து  ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று விடுதலையானார்கள். இவர்களில் முருகனும், சாந்தனும் வெளிநாட்டவர் என்பதால் திருச்சி வெளிநாட்டு சிறைவாசிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நளினி காட்பாடியில் உறவினர் வீட்டுக்கு சென்றார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இவர்கள் சிறையில் இருந்தனர். உச்சநீதிமன்றம் 6 பேரையும் விடுதலை செய்த தீர்ப்பின் விவரம் வெளியானதும், நேற்று காலை பரோலில் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியிருந்த முருகன் மனைவி நளினி பரோல் நிபந்தனைபடி காட்பாடி போலீஸ் நிலையத்தில் கடைசி முறையாக கையெழுத்திட்டார்.

அவர், பெண்கள் தனிச்சிறைக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் பிரம்மபுரம் வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில், நேற்று பிற்பகல் 2 மணியளவில் 6 பேரை விடுவித்து சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பின் நகல் வேலூர் சிறை நிர்வாகத்துக்கு கிடைத்தது. தொடர்ந்து வழக்கமான சிறைத்துறை நடைமுறைகள் முடிந்து அவர்கள் நேற்று மாலை 4.50 மணியளவில் சிறையை விட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியில் வந்தனர். அதேநேரத்தில் மாலை 3.45 மணியளவில் பரோலில் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியிருந்த நளினி போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் தனிச்சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரது பரோல் ரத்து செய்யப்பட்டு, விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் முடிந்து 4.45 மணியளவில் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு தனது கணவர் முருகனை சந்தித்து பேசினார்.

அப்போது கண்ணீர்மல்க மகிழ்ச்சியை நளினி தெரிவித்தார்.  விடுதலையான முருகனும், சாந்தனும் வெளிநாட்டவர்கள் என்பதால் மாலை 5 மணியளவில் டிஎஸ்பிக்கள் பழனி, ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் திருச்சியில் வெளிநாட்டு சிறைவாசிகள் தங்கியிருக்கும் முகாமில் தங்க வைப்பதற்காக அழைத்து செல்லப்பட்டனர். ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்: சென்னை  புழல் மத்திய சிறையில் இருந்த ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் ஆகியோர் நேற்று  மாலை 5 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். பின்னர்,  அவர்கள் பலத்த பாதுகாப்புடன்  திருச்சி முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக விடுதலை  செய்யப்பட்டவர்களை பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர்  சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். புழல் சிறையில் இருவர் விடுதலை  செய்யப்பட்டதை கேள்விப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் வெள்ளை புறாவை பறக்க  விட்டும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ரவிச்சந்திரன்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் (48) மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பரோலில் இருந்த ரவிச்சந்திரன் நேற்றிரவு மதுரை சிறைச்சாலைக்கு வந்து பரோலை ரத்து செய்ய கடிதம் வழங்கினார்.  விடுதலை உத்தரவு நகல் இவருக்கு வழங்கப்பட்டது. இரவு 8.30 மணியளவில் விடுதலையாகி வெளியில் வந்தார். அவரை ரவிச்சந்திரனின் குடும்பத்தினர், மதுரையைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன்,  ஏழுதமிழர் விடுதலை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திலீபன் செந்தில் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். 10ம் வகுப்பு மட்டுமே படித்த நிலையில், தனது 19வது வயதில்  சிறைக்கு சென்ற ரவிச்சந்திரன் முதுநிலை டிப்ளமோ முடித்துள்ளார். தமிழ் ஆர்வலர். ஆங்கிலப்புலமையும் இருக்கிறது. ‘2018ல் டாப் சீக்ரெட் சிவராஜன்’ என்ற புத்தகத்தை இவர் வெளியிட்டு, வரவேற்பை பெற்றார். இன்னும் திருமணமாகவில்லை. குடும்பத்தினருடன் இருந்து, பொது காரியங்களில் ஈடுபடுவேன் எனத்தெரிவித்தார்.



Tags : Nalini ,Rajiv Gandhi , 6 people including Nalini acquitted in Rajiv Gandhi assassination case after 30 years: Nalini returned to her cousin's house
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...