திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய அறிவுரை

சென்னை: திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில், வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுகவினருக்கு முக்கிய அறிவுரை வழங்கினார். திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த அக்டோபர் 9ம் தேதி நடந்தது. இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்ட செயலாளரும், தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர் பட்டியலை தயார் செய்து நவம்பர் 10ம் தேதிக்குள் தலைமைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும், அவ்வாறு நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவர் அந்தந்த வாக்குச்சாவடியில் குடியிருப்பவராகவும்-வாக்குச்சாவடி குறித்து முழுமையாக தெரிந்தவராகவும்-களப்பணி செய்பவராகவும் இருத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து திமுக தலைமைக்கு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி முகவர்களுடன் (பிஎல்ஏ-2) நேற்று மாலை காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். இதற்காக 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக உள்ளரங்கு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆலோசனையில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நகர ஒன்றிய- பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தொகுதிகளில் உள்ள முகவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அழைத்து அவர்களுடன் நேரடியாக உரையாடினார்.

2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல்வேறு முக்கிய அறிவுரைகளை அவர் வழங்கினார். ‘‘நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு, புதுவைக்கு உட்பட்ட நாற்பது தொகுதிகளையும் கைப்பற்றுவதன் மூலமாக அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ வேண்டும். எந்த வகையிலும் யாரும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் 100 விழுக்காடு வெற்றியை நாம் பெற இதுதான் அடித்தளமாக அமையும் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.  மேலும் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கட்சியினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories: