×

காமராஜர் துறைமுகத்தில் கிரேன் ரோப் அறுந்து விழுந்து ரஷ்ய அதிகாரி பரிதாப பலி

சென்னை: சென்னை காமராஜர் துறைமுகத்தில் ரஷ்ய கப்பலில் இருந்து உதிரபாகங்களை கீழே இறக்கி வைத்தபோது, கிரேன் ரோப் அறுந்து விழுந்ததில் ரஷ்ய அதிகாரி பரிதாபமாக பலியானார். யு.ஹெச்.எல் என்ற ரஷ்ய கப்பல், கார்கோ கனரக வாகனம் மற்றும் உதிரி பாகங்களை ஏற்றிக் கொண்டு கடந்த 9ம் தேதி மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்துக்கு வந்தது. நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில்  கிரேன் ஆபரேட்டர் சீனிவாசன், ரோப் மூலம் கப்பலின் இரண்டாம் தளத்தில், பெட்டியில் இருந்த உதிரிபாகங்களை கப்பலின் கீழே இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கிரேனில் இருந்த ரோப் அறுந்தது. அதிலிருந்த பெட்டி  கீழே நின்று கொண்டிருந்த  கப்பல் தலைமை அதிகாரி கொண்டாஸ்டிஸ் (46) மற்றும் துணை அதிகாரி ரோமன் கேசஸ் (43)  மீது விழுந்தது.

படுகாயமடைந்து அவர்களின்  அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். இதில்,  சம்பவ இடத்திலேயே கொண்டாஸ்டிஸ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததும், துணை அதிகாரி ரோமன் கேசஸ் (43) பலத்த காயமடைந்து மயங்கி கிடந்ததும் தெரிந்தது. உடனே, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதன்  மூலம் ரோமன் கேசஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கொண்டாஸ்டிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி  வருகின்றனர். பலியான கொண்டாஸ்டிஸ் ரஷ்யாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Kamaraj port , Russian officer tragically killed after crane rope falls at Kamaraj port
× RELATED எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில்...