×

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பொதுப்பணி துறை கண்காணிப்பு

சென்னை: தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 500 கனஅடியில் இருந்து 1000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்தது. அதிகபட்சமாக பொன்னேரியில் 69 மில்லி மீட்டர் மழையும், சோழவரத்தில் 61 மில்லி மீட்டர் மழையும், செங்குன்றத்தில் 54 மில்லி மீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில் 47 மில்லி மீட்டர் மழையும், ஆவடியில் 45 மில்லி மீட்டர் மழையும், பூந்தமல்லியில் 39 மில்லி மீட்டர் மழையும், திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டையில் 36 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

அதேபோல், கும்மிடிப்பூண்டியில் 32 மில்லி மீட்டர் மழையும், பூண்டியில் 31 மில்லி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக திருத்தணியில் 13 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 548 மி.மீ, மழையும், சராசரியாக 36.5 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை நீடித்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் அதிகமாக திறந்தால், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று முன்தினம் 500 கனஅடி உபரிநீர் சீராக வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று உபரி நீர் திறப்பு 1000 கன அடியாக உயர்த்தப்பட்டது.  

ஏரியிலிருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேறி வருவதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. தற்போது 2,738 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரி மற்றும் வரத்து கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 558 கனஅடி‌ நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரியில் இருந்து 500 கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது.  இந்த உபரிநீர் கால்வாய் வழியாக சாமியார் மடம், தண்டல்கழனி, கிருஷ்ணா நகர், தமிழன் நகர், திருநீலகண்ட நகர், பாலாஜி நகர், வடபெரும்பாக்கம், கொசப்பூர் வழியாக எண்ணூர் கடலில் கலக்கிறது. இந்த தண்ணீர் திறப்பால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Chembarambakkam ,Public Works Department , 1000 cubic feet of excess water released from Chembarambakkam lake warns coastal residents Public Works Department monitoring
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...