×

மோடி, அமித்ஷா புறக்கணிப்பு: பாஜ ஓரங்கட்டி வருவதால் அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி: 2024 மக்களவை தேர்தலில் மோதி பார்க்க முடிவு

சென்னை: தமிழகம் வந்த மோடி, அமித்ஷா ஆகியோர் புறக்கணித்ததால் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 2024ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் மோதி பார்க்கவும் அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக தற்போது 4 அணிகளாக உடைந்துள்ளது. அதில் சசிகலா தன்னுடைய தலைமையில் அதிமுக இயங்க வேண்டும் என்று கருதுகிறார். ஆனால், அவரது பின்னால் அவர் சார்ந்த சமூகத்தின் தொண்டர்கள் மட்டுமே உள்ளனர். அதேபோல டிடிவி.தினகரனும் தனி அணியாக உள்ளார். அவரிடம் அதிமுகவில் பொறுப்பு கிடைக்காதவர்கள் சேர்ந்தனர். ஆனால் அவர்களையும் அவரால் தக்க வைக்க முடியாததால், பெரும்பாலானவர்கள் திமுகவில் சேர்ந்து விட்டனர். சிலர் மீண்டும் அதிமுகவில் சேர்ந்து விட்டனர். ஒரு சிலர் மட்டுமே அவருடன் உள்ளனர். தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மோதல் வெடித்து அதிமுக இரண்டாக உடைந்துள்ளது. அதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன்தான் உள்ளனர். ஆனால், தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.

அவர் கூறுவதுபோல தென் மாவட்டங்களில் உள்ள தொண்டர்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக ஒன்றாக இருந்தபோதே திமுக 39 தொகுதிகளில் வென்றது. தற்போது 4 அணிகளாக உடைந்து விட்டது. மேலும் திமுக ஆளும் கட்சியாக உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் கட்சிக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. குறிப்பாக தற்போது மழை வெள்ளத்தை திமுக அரசு அணுகிய விதம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் பல மடங்கு திமுகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்துள்ளது. இதனால் திமுக மற்றும் கூட்டணிகளை சமாளித்து, டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்றால், அதிமுக அணிகள் ஒன்று சேர வேண்டும் என்று பாஜ கருதுகிறது. இதற்காக பலமுறை 4 அணிகளின் தலைவர்களிடமும் கூறி வருகின்றனர். அதில் 3 பேர் சம்மதித்து விட்டனர். எடப்பாடி பழனிசாமி மட்டும் சம்மதிக்கவில்லை.

அதில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை கட்சியில் சேர்க்க முடியாது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்கலாம். ஆனால் அவைத் தலைவர் பதவி மட்டுமே தர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இதனால் பாஜ தலைமை இரு தலைவர்களையும் ஆதரித்து வருகிறது. ஒருவரை மட்டும் ஆதரிக்க முடியாது என்பதை கூறிவிட்டனர். எடப்பாடி பழனிசாமியை தங்கள் வழிக்கு கொண்டு வருவதற்காக அவருக்கு வேண்டிய, நெருங்கிய கான்ட்ராக்டர்களை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால்தான் சில நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அங்கு ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் மூலம் அமித்ஷாவை சந்தித்தார். ஆனால் மோடி சந்திக்க மறுத்து விட்டார். இதனால் 4 நாள் பயணமாக சென்றவர், 2வது நாளிலேயே திரும்பி விட்டார். ஆனாலும் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவருக்கு வேண்டிய தொழில் அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை மட்டும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில்தான் மோடி நேற்று முன்தினம் திண்டுக்கல் வந்தார். அவரை வரவேற்கும்ேபாதே அல்லது வழி அனுப்பும்போதே தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்க மறுத்து விட்டது. அதோடு வரிசையில் நின்று எடப்பாடி பூங்கொத்து கொடுக்கும்போது பன்னீர்செல்வத்தையும் அழைத்து அருகில் நிற்க வைத்து ஒன்றுபோல பூங்கொத்து வாங்கியுள்ளார். ஆனால் இருவரையும் தனியாக சந்திக்க வில்லை. வழியனுப்பும்போது சந்திக்காமல் டாட்டா காட்டி விட்டு சென்று விட்டனர். இது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. தமிழகத்தில் பாஜ கூட்டணியில் உள்ள பெரிய கட்சி அதிமுகதான். ஆனால் அதை மதிக்காமல் தனக்கு தனியாக சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று விரக்தி அடைந்தார்.

அதேநேரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சென்னை வந்தார். அவர் தனியார் நிறுவன விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார். பன்னீர்செல்வம் மட்டும் கலந்து கொண்டார். அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தும், அமித்ஷாவை சந்திக்காமல் இருந்தார். அவரை சந்திக்க நேரம் கூட கேட்கவில்லை. அந்த அளவுக்கு அதிருப்தியில் இருந்தார். கட்சி நிர்வாகிகள் முழுமையாக தன்னிடம் இருந்தும் பாஜ தன்னை புறக்கணிக்கிறது என்று அவர் கருதுகிறார். மேலும் 2024ல் நடக்கப்போவது மக்களவை தேர்தல். இதில் நம் பலத்ைத காட்டுவோம். இனி நான் இறங்கிப் போவது இல்லை. வேண்டும் என்றால் அவர்கள் என்னைத் தேடி வரட்டும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலில் பாஜ தன்னிடம் கூட்டணி வைக்காமல் பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி மற்றும் பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் வேண்டும் என்றால் கூட்டணி வைக்கட்டும். நாம் தனித்து நின்று நமது பலத்தை காட்டுவோம். இந்த தேர்தலில் நமது பலத்தை அவர்கள் தெரிந்து கொண்டு, தாமாக தேடி வருவார்கள்.  தொடர்ந்து அவர்கள் நம்மை வற்புறுத்துவார்கள். பாஜ தேசிய தலைமை இறங்கி வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி கருதுவதாக கூறப்படுகிறது. இதனால்தான் அமித்ஷா சந்திப்பை எடப்பாடி பழனிசாமி தவிர்த்ததாக அவரது ஆதரவு தலைவர்கள் கூறுகின்றனர். இதற்கு ஏற்பத்தான் சென்னையில் நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை, அதிமுகவில் தொண்டர்கள்தான் முக்கியம். தலைவர்கள் இல்லை. தொண்டர்கள் தலைவரை தேர்வு செய்யவார்கள் என்று தெரிவித்தார். இதனால் அதிமுக, பாஜ மோதல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட தொடங்கிவிட்டது என்கின்றனர் அதிமுக மூத்த தலைவர்கள்.

Tags : Modi ,Amit Shah ,BJP ,Edappadi Palaniswami ,2024 Lok Sabha elections , Modi, Amit Shah boycott: Shocked as BJP sidelines Edappadi Palaniswami: Decided to face off in 2024 Lok Sabha elections
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...