×

ஐசிசி உலக கோப்பை டி20 பைனலில் இன்று பாகிஸ்தான் - இங்கிலாந்து பலப்பரீட்சை

மெல்போர்ன்: ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான பைனலில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. எம்சிஜி மைதானத்தில் நடக்கும் இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இந்த தொடர் மிகவும் சுவாரசியமான முடிவுகளைக் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது என்றால் மிகையல்ல. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச் சுற்றுடன் மூட்டை கட்டியது, நடப்பு சாபியன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது, இங்கிலாந்து அணி அயர்லாந்திடம் மண்ணைக் கவ்வியது, பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே போட்டுத் தாக்கியது, இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்திடம் 13 ரன்னில் தோற்று பரிதாபமாக வெளியேறியது... என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்; அதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 2வது முறையாக கோப்பையை வெல்லும் என்ற பிரபலங்களின் பெரும்பான்மை கணிப்பும் கானல் நீரானது. அதே சமயம் சூப்பர் 12 சுற்றில் தட்டுத் தடுமாறிய பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளன. அரையிறுதியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வீத்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணியும், பலம் வாய்ந்த இந்தியாவை அசால்ட்டாக 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடிய இங்கிலாந்தும் இன்று பைனலில் மோதுகின்றன. இந்த 2 அணிகளும் நடப்பு தொடரில் 3வது முறையாக களத்தில் சந்திக்கின்றன. 2007 பைனலில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான், 2009 பைனலில் இலங்கையை வீழ்த்தி உலக கோப்பையை முத்தமிட்டது. 2010 பைனலில் ஆஸி.யை வீழ்த்தி பட்டம் வென்ற இங்கிலாந்து, 2016 பைனலில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்று 2வது இடம் பிடித்தது. தற்போது 3வது முறையாக பைனலில் விளையாடும் இந்த அணிகள், மீண்டும் கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க வரிந்துகட்டுகின்றன.

அடிலெய்டில் டாஸ் வென்ற அணி ஆட்டத்தில் வென்றதில்லை என்ற சோக வரலாற்றை மாற்றி எழுதிய உற்சாகத்துடன் இங்கிலாந்து வீரர்கள் களமிறங்குகின்றனர். பட்லர், ஹேல்ஸ், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன்,  மொயீன், சாம் கரன், கிறிஸ் வோக்ஸ்... என அதிரடிக்கு பஞ்சமில்லாத பேட்டிங் வரிசை பாக். பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும். பாகிஸ்தான் அணியும் சமபலம் வாய்ந்தது என்றாலும், ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் அவர்கள் அவ்வப்போது சறுக்குவது இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கலாம். பாக். அணிக்கு இதுவரையிலான ஆட்டங்களில் முடிவு 1992 உலக கோப்பை வரலாற்றை போலவே அமைந்திருக்கும் அபூர்வ ஒற்றுமை பைனலிலும் பலித்தால் அந்த அணி உலக கோப்பையை முத்தமிடுவதை யாராலும் தடுக்க முடியாது. இரு அணிகளுமே 2வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் இன்றைய பைனலில் அனல் பறப்பது உறுதி.

Tags : Pakistan ,England ,ICC World Cup T20 , Pakistan vs England Test in ICC World Cup T20 Final today
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்