விறுவிறுப்பாக நடைபெற்ற இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு: 65.50% வாக்குகள் பதிவு

சிம்லா: இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 65.50% வாக்குகள் பதிவாகியுள்ளன. இமாசல பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சியின் சட்டப் பேரவை காலம் முடிவுக்கு வருகிறது. அதனால் 68 இடங்களை கொண்ட சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் முடிந்த நிலையில், இந்த தேர்தலில் 24 பெண்கள் உட்பட 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர். ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன.

பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே போட்டி நிலவும் நிலையில், பாஜக சார்பில் 20 அதிருப்தியாளர்களும், காங்கிரஸ் சார்பில் 12 அதிருப்தி வேட்பாளர்களும் சீட் கிடைக்காத அதிருப்தியில் களம் காணுகின்றனர். நேற்றுமுன்தினம் மாலை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. முக்கிய வேட்பாளர்களாக முதல்வர் ஜெய்ராம் தாக்குர் (செராஜ்), மாநில காங்கிரஸ் தலைவர் அக்னிஹோத்ரி (ஹரோலி), முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் (சிம்லா ஊரகம்) ஆகியோர் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 7,881 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 8 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, முதல்வர் ஜெய்ராம் தாக்குர் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 65.50% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று (சனிக்கிழமை) பதிவாகிற வாக்குகள், அடுத்த மாதம் 8ம் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குகளுடன் எண்ணப்படுகிறது. இமாச்சல் பிரதேசத்தை பொருத்தமட்டில் மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருமா? அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? என்பது டிசம்பர் 8ம் தேதி தெரிந்துவிடும்.

Related Stories: