×

நவராத்திரி நைவேத்திய பாயசம்!

நன்றி குங்குமம் தோழி

நவராத்திரி... ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த ஒன்பது நாட்களும் பொதுவாக வீட்டில் கொலு வைப்பது ஐதீகம். ஒரு சிலருக்கு கொலு வைக்கும் பழக்கம் இல்லை என்றாலும், நவராத்திரி அன்று தினமும் காலையில் அம்பாளுக்கு பத்து விதமான நைவேத்தியங்கள் செய்து, பூஜித்து வணங்குவார்கள்.

அப்படி செய்யும்போது தினமும் ஒரு பாயசம் செய்வது வழக்கம். முதல் நாள் அமாவாசையன்று பருப்புப் பாயசம் செய்து நிவேதித்து, அதன் பின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு விதமாக பாயசங்கள் செய்து பூஜித்து வந்தால், அம்மனின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரி அன்று அம்மனை தரிசித்து அவளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு வகை பாயசம் படைத்து தோழியருக்கு அவளின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க அதன் செய்முறையினை வழங்கியுள்ளார் சமையல் கலைஞர் நாகலட்சுமி.

பலாப்பழ பாயசம்

தேவையானவை :

பலாச்சுளை விழுது- 1 கப்,
கெட்டிப் பால்- 4 கப்,
வெல்லம்- 1 கப்,
ஏலப்பொடி- 1 ஸ்பூன்,
திராட்சை,
முந்திரி- தலா 10,
நெய்- 2 ஸ்பூன்.

செய்முறை:

முதலில் சில பலாச்சுளைகளை ஆவியில் வேகவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். அதில் இரண்டு கப் பால் சேர்த்து வேகவிட்டு, வெந்ததும் வெல்லம் சேர்க்க வேண்டும். வெல்லம் கரைந்து ஒன்றானதும் மீண்டும் இரண்டு கப் பால் சேர்த்து, மிதமான தீயில் வைத்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். அனைத்தும் நன்கு சேர்ந்து வந்ததும், இறக்கி வைத்து, ஒரு கடாயில் திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டு ஏலப்பொடி சேர்க்கவும். இதுவே பலாப்பழ பாயசம். இதனை சக்கப் பிரதமன் என்றும் அழைப்பார்கள்.

அரிசி தேங்காய் பாயசம்

தேவையானவை :

தேங்காய் துருவல்- 1 கப்,
அரிசி- 4 ஸ்பூன்,
நெய்- 2 ஸ்பூன்,
ஏலப்பொடி- 1 ஸ்பூன்,
முந்திரி,
திராட்சை - தலா 10,
வெல்லப்பொடி - 1 கப்.

செய்முறை:

முதலில் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்துக் களைந்து, பின் தேங்காய் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதில் 1 கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கை விடாமல், மிதமான தீயில் வைத்துக் கிளற வேண்டும். அரிசி வெந்ததும், வெல்லப்பொடி சேர்த்துக் கிளறி வெல்ல வாசனை போனதும் இறக்கி வைத்து, ஏலப்பொடி சேர்க்கவும். நெய்யில் திராட்சை, முந்திரியை வறுத்துச் சேர்க்கவும். இதுவே அரிசி தேங்காய் பாயசம். அம்பாளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

சேமியா பாயசம்


தேவையானவை :

வறுத்த சேமியா- 1 கப்,
பால்- 2 கப்,
சர்க்கரை - 1½ கப்,
ஏலப்பொடி- ½ ஸ்பூன்,
திராட்சை,
முந்திரி- தலா 10,
குங்குமப்பூ- ஐந்தாறு,
நெய்- 2 ஸ்பூன்.

செய்முறை:  முதலில் சேமியாவை சிறிது நீர், 1 கப் பால் கலந்து வேகவிடவும். சேமியா நன்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கழித்து பாலையும் சேர்த்து கொதிக்க விடவும். மிதமான தீயில் சில நிமிடம் கொதித்ததும், இறக்கி வைத்து, ஏலப்பொடி போட்டு, நெய்யில் திராட்சை, முந்திரி வறுத்துப் போட்டு, சில குங்குமப்பூக்களை சேர்க்கவும். குங்குமப்பூ வாசனை மற்றும் பாயசத்துக்கு கலரையும் கொடுக்கும். குங்குமப்பூ அம்பாளுக்கு மிகவும் விருப்பமானது. மகிழ்ச்சியை தரக்கூடியது.

ஜவ்வரிசிப் பாயசம்

தேவையானவை :

மாவு ஜவ்வரிசி - 1கப்,
பால்- 1 கப்,
சர்க்கரை - 1½ கப்,
ஏலப்பொடி- 1 ஸ்பூன்,
முந்திரி,
திராட்சை- தலா 10,
நெய்- 3 ஸ்பூன்,
குங்குமப்பூ- ஐந்தாறு.

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் திராட்சை, முந்திரியை 3 ஸ்பூன் நெய்யில் வறுத்து எடுத்துக் கொண்டு, அதிலேயே மாவு ஜவ்வரிசியைப் போட்டு மிதமான தீயில் படபடவெனப் பொரித்து எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் பாதிபால் சேர்த்து ஜவ்வரிசியை நன்கு வேகவிட வேண்டும். வெந்ததும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரைந்ததும், பாதி பாலையும் சேர்த்து சிறிது காய்ந்ததும் இறக்கி வைத்து, ஏலப்பொடி சேர்க்கவும். நெய்யில் வறுத்து வைத்துள்ள திராட்சை, முந்திரியைப் போட்டு, குங்குமப் பூவையும் சேர்க்கவும். பாயசம் ருசியாக, மணமாக, கலராக, அழகாக இருக்கும்.

அவல் பாயசம்

தேவையானவை :

கெட்டி அவல்- 1 கப்,
கெட்டி பால்- 1 கப்,
நெய் - 2 ஸ்பூன்,
சர்க்கரை அல்லது வெல்லம் - 1½ கப்,
ஏலப்பொடி- ½ ஸ்பூன்,
திராட்சை,
முந்திரி- தலா 10,
குங்குமப்பூ - ஐந்தாறு.

செய்முறை:

முதலில் கடாயில் திராட்சை, முந்திரி போட்டு நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே நெய்யிலேயே சுத்தமான அவலைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். 1 கப் பாலும், ½ கப் நீரும் சேர்த்து வேகவிடவும். பொரித்த அவல் என்பதால் சீக்கிரமே வெந்து விடும். வெந்ததும் சர்க்கரை சேர்த்து சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும். ஏலம், திராட்சை, முந்திரி சேர்க்கவும். குங்குமப்பூவையும் சேர்க்கவும். இதுவே அவல் பாயசம். செய்வது சுலபம்.

கோதுமை ரவை பாயசம்

தேவையானவை :

கோதுமை ரவை- ½ கப்,
நெய் - 3 ஸ்பூன்,
பால்- 1 கப்,
பொடித்த வெல்லம்- 1½ கப்,
திராட்சை,
முந்திரி தலா- 10,
ஏலப்பொடி- ½ ஸ்பூன்.

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி திராட்சை, முந்திரியை வறுத்து எடுத்துக் கொண்டு, அதிலேயே கோதுமை ரவையைச் சிறிது வறுத்து, பின் பாலும் நீரும் சேர்த்து வேகவிடவும். குழைய வெந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும். வெல்ல வாசனை போனதும் இறக்கிவைத்து, ஏலப்ெபாடி, முந்திரி, திராட்சை சேர்க்கவும். அம்பாளுக்கு மிகவும் ப்ரீதியானது கோதுமை பாயசம்.

பால் பாயசம்

தேவையானவை :

சீரக சம்பா அல்லது சாதா பச்சரிசி - ¾ கப்,
தண்ணீர்- 3 கப்,
பால்- 1 லிட்டர்,
சர்க்கரை- 2 கப்,
ஏலப்பொடி- 1 ஸ்பூன்,
திராட்சை,
முந்திரி- தலா 10,
லவங்கம் (கிராம்பு) - 4,
நெய் - 2 ஸ்பூன்.

செய்முறை:

குக்கரில் 3 கப் நீர் ஊற்றி ¾ கப் அரிசியை களைந்து போட்டு நான்கைந்து விசில் விட்டுக் குழைய வேகவிட வேண்டும். பாலை நன்கு காய்ச்ச வேண்டும். காய்ந்ததும் சாதத்தை நன்கு குழைத்து பாலில் சிறிது சிறிதாகப் போட்டு கட்டி தட்டாமல் கிளற வேண்டும். நன்கு வற்றியதும் சீனி சேர்த்துக் கிளற வேண்டும். பாயச நிலைக்கு வந்ததும் நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்துப் போட்டு ஏலப்பொடி சேர்க்க வேண்டும். சிலர் இறக்கி வைத்ததும் சூட்டுடன் ஒரு கரண்டி  தேங்காய்ப்பால் சேர்ப்பார்கள். இது அவரவர் விருப்பம்.

பாதாம் பாயசம்

தேவையானவை :

பாஸ்மதி அரிசி - ½ கப்,
பாதாம்- 1 கப்,
நாட்டு சர்க்கரை- 1½ கப்,
கெட்டிப் பால்- 1 கப்,
நெய்- 2 ஸ்பூன்,
ஏலம்- ½ ஸ்பூன்,
திராட்சை,
முந்திரி,
பிஸ்தா- தலா 10.

செய்முறை: முதலில் பாஸ்மதி அரிசியை ½ மணி நேரம் ஒரு கப் நீரில் ஊறவிட வேண்டும். பாதாமையும் தனியாக 1 மணி நேரம் ஊறவிட்டு தோல் நீக்க வேண்டும். இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக ரவை பதத்துக்கு கெட்டியாக சிறிது நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை ½ டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு கரைத்து கொதிக்க விட வேண்டும். சிறிது நேரத்தில் விழுது வெந்ததும், நாட்டு சர்க்கரை சேர்க்க வேண்டும். ஒரு கொதி வந்து வெல்ல வாசனை போனதும், சுண்டக் காய்ச்சிய பாலைச் சேர்த்து 1 நிமிடம் கழித்து இறக்கி விடவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பிஸ்தா சேர்த்து விடவும். இது கொஞ்சம் ரிச்சான பாயசம்!

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!