×

குமரி மாணவர் ஷாரோன் கொலை வழக்கு: கிரீஷ்மாவின் தாய், மாமா ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு

திருவனந்தபுரம்: குமரி மாவட்டம், நெய்யூர் கல்லூரி மாணவர் ஷாரோன் கஷாயத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்டது தொடர்பாக, அவரது காதலி கிரீஷ்மா, தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கிரீஷ்மா மீது கொலை வழக்கும், சிந்து மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் மீது கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரையும் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் ஷாரோன் கொலை தொடர்பாக பல முக்கிய விவரங்கள் போலீசுக்கு கிடைத்தன.

காவலில் வைத்து விசாரணையை நடத்தி முடித்த பின்னர் கிரீஷ்மா உள்பட 3 பேரையும் போலீசார் நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இவர்கள் 3 பேரும் ஜாமீன் கோரி நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் சிந்து மற்றும் நிர்மல்குமாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கிரீஷ்மாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிந்து மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் ஜாமீன் கோரி நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில் கூறியிருப்பது: ஷாரோனை கிரீஷ்மா காதலித்து வந்த விவரம் எதுவும் எங்களுக்குத் தெரியாது. ஷாரோன் இறந்ததற்கு பின்னர் தான் இந்த விவரம் எங்களுக்குத் தெரியவந்தது. ஷாரோன் மரணத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. விஷ பாட்டிலை நாங்கள் மறைத்து வைக்கவில்லை. எங்கள் மீது பொய்யான புகார் சுமத்தப்பட்டுள்ளது. கிரீஷ்மாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்காகவே எங்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில் அடைத்திருப்பதால் எங்களது எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும். பிழைக்க வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

காவலில் வைத்து நடத்திய விசாரணையில் கூடுதலாக எந்த ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றவில்லை. இருவருக்கும் பல நோய்கள் உள்ளன. எனவே எங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Tags : Sharon ,Kreishma ,Ikourt , Kumari student Sharon murder case: Grieshma's mother, uncle plead for bail in court
× RELATED ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை...