வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது: வானிலை மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் பேசிய வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலு குறைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை ஒட்டி நிலவுவதாக கூறினார். வடகிழக்கு பருவமழை, தமிழ்நாடு, புதுச்சேரியில் தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிட்ட பாலச்சந்திரன், 220 இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளதாக கூறினார். சீர்காழியில் மட்டும் 112 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 44 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது என்றார்.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை முதல் கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறினார். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் தமிழ்நாடு, ஆந்திர கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: