×

ஒரு நாள் பயணமாக சென்னை வந்த அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு: அதிமுக மோதல் குறித்து ஆலோசனை; எடப்பாடி புறக்கணிப்பு

சென்னை: ஒரு நாள் பயணமாக சென்னை வந்த அமித்ஷாவை, ஓபிஎஸ் திடீரென சந்தித்து பேசினார். அப்போது எடப்பாடி மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜக தன்னை தொடர்ந்து புறக்கணித்து வந்ததால், அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமியும் புறக்கணித்தார். சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் நேற்று நள்ளிரவு சென்னை வந்தார். சென்னை வந்த அவரை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார்.

இரவு அவர் அங்கு தங்கினார். தொடர்ந்து அவர் இன்று காலை 11.05 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டார். தொடர்ந்து அவர் 11.25 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் பங்கேற்க முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அவர் முதல் இருக்கையில் அமர்ந்து இருந்தார். ஆனால், எடப்பாடி விழா தொடங்கும் வரை வரவில்லை. அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கூட்டத்தை புறக்கணித்தார்.

அதைத்தொடர்ந்து 1 மணி முதல் 2 மணி வரை கலைவாணர் அரங்கத்தில் அவர் தங்கினார். அங்கேயே அவர் மதியம் உணவையும் அருந்தினார். அந்த இடைப்பட்ட நேரத்தில் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டார். இதற்காக ஒரு ஆடிட்டர் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர் சந்திக்க அனுமதியும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சந்திப்பின் போது அதிமுக உட்கட்சி பிரச்னை விவகாரம் தொடர்பாக அவர் பேச திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் கூற பட்டியல் போட்டுவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரிந்துள்ள அதிமுகவை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அமித்ஷாவிடம் வலியுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து அமித்ஷா அங்கிருந்து புறப்பட்டு சென்னை திநகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு பாஜவின் மையக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும். வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் கட்சி வளர்ச்சிப் பணி, அதிமுக கூட்டணி குறித்தும் அவர் பேச உள்ளதாக கூறப்படுகிறது. பாஜ தலைமை அலுவலகத்தில் ஒரு நடிகர், கல்வியாளர் ரமேஷ் பிரபா, பாமக துணை பொது செயலாளர் ஒருவர் ஆகியோர் அமித்ஷா முன்னிலையில் பாஜவில் இணைகின்றனர்.

தொடர்ந்து அவர் பிற்பகல் 3.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து அவர் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஒன்றிய உள்துறை அமித்ஷா வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



Tags : OPS ,Amitshah ,Chennai ,Edappadi , OPS's surprise meeting with Amit Shah, who arrived in Chennai on a one-day visit: advises on AIADMK conflict; Serious neglect
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்