×

மனைவி குறித்து அவதூறாக பேசியதால் போதை பைனான்சியர் சுட்டுக் கொலை: டெல்லியில் பயங்கரம்

புதுடெல்லி: தனது மனைவி குறித்து அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தற்போது டெல்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தலைநகர் ெடல்லியின் ஜிடிபி என்கிளேவ் பகுதியில் நேற்று காலை பைனான்சியர் ஹரிஷ் பாடி என்ற இளைஞரை நோக்கி மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தலைமறைவானார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த இளைஞனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஹரிஷ் பாடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஜிடிபி என்கிளேவில் வசிக்கும் ககன் ஜெயின் (40) என்பது அடையாளம் தெரிந்தது. இவர் மீது ஏற்கனவே நான்கு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து தலைமறைவாக இருந்த ககன் ஜெயினை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது, ​​அந்த வீடு பூட்டி இருந்தது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றிரவு ககன் ஜெயினை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஹரிஷ் பாடியும், ககன் ஜெயினும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் தான். சூதாடும் பழக்கம் கொண்ட ககன் ஜெயின், ஹரிஷிடம் ரூ.40,000 கடன் வாங்கியிருந்தார். அதற்கு ஈடாக மாதம், 4,000 ரூபாய் அசலுடன் வட்டியும் கொடுத்து வந்தார். இருந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. சம்பவ நாளில் குடிபோதையில் இருந்த ஹரிஷ், ககன் ஜெயினிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.

மேலும், ககன் ஜெயினின் மனைவி குறித்து அருவருக்கத்தக்க வகையில் ஹரிஷ் பேசியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த ககன் ஜெயின், ஹரிஷை கொல்ல முடிவு செய்துள்ளார். சம்பவ நாளின் இரவு மது அருந்திய ககன் ஜெயின், பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த ஹரிஷை சுட்டுக் கொன்றார். அதையடுத்து ககன் ஜெயினை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Tags : Delhi , Narcotics financier shot dead for defaming wife: Terror in Delhi
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு