×

டி.20 உலக கோப்பை பைனலில் நாளை இங்கிலாந்து-பாகிஸ்தான் பலப்பரீட்சை: மெல்போர்னில் மிரட்டும் மழை

மெல்போர்ன்: 8வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் மெல்போர்னில் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சூப்பர் 12 சுற்றில் முதல் 2 போட்டியிலும் தோல்வி அடைந்த பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு காலி என கணிக்கப்பட்ட நிலையில் தென்ஆப்ரிக்கா, கத்துக்குட்டி நெதர்லாந்திடம் தோல்வி அடைந்ததால், வாய்ப்பை பெற்றது. அரையிறுதியில் பாகிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தியது. அந்த அணியின் பவுலிங் மிரட்டலாக உள்ளது. ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் வேகத்தில் மிரட்டுகின்றனர்.

சுழலில் சதாப்கான் ஜொலிக்கிறார். முக்கியமான நேரத்தில் கேப்டன் பாபர் அசாம் பார்முக்கு திரும்பி உள்ளார். 2009ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் 13 ஆண்டுகளுக்கு பின் இறுதி போட்டிக்கு வந்துள்ளது. 2வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களம் இறங்குகிறது. மறுபுறம் இங்கிலாந்து அணி அரையிறுதியில் நம்பர் 1 இந்தியாவை பந்தாடிய உற்சாகத்தில் பைனலில் களம் இறங்குகிறது. அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, லிவிங்ஸ்டன், கிறிஸ்வோக்ஸ், சாம்கரன் என ஆல்ரவுண்டர்கள் பட்டாளம் உள்ளது. சுழலில் அடில் ரஷித் அரையிறுதியில் இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தார்.

பேட்டிங்கில் ஹேல்ஸ், பட்லர் அதிரடியில் மிரட்டினர். இதற்கு முன் 2010ல் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து 2வது முறையாக கோப்பையை முத்தமிடும் ஏக்கத்தில் உள்ளது. இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெறும். ஒரு லட்சம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்க கூடிய மெல்போர்ன் மைதானத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்னவே விற்று தீர்ந்துவிட்டன. இந்நிலையில் அடுத்த 2 நாட்கள் அங்கு கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை 95 சதவீதம் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே வசதி உண்டு. இதனால் நாளை போட்டி பாதிக்கப்பட்டால் அடுத்தநாளில் விட்ட இடத்தில் இருந்து போட்டி தொடங்கும். ஆனால் திங்கட்கிழமையும் மழை அச்சுறுத்தல் உள்ளது. இதனால் குறைந்த ஓவர்களிலாவது போட்டி நடத்தப்படும். அதற்கும் வாய்ப்பு இல்லை என்றால் கோப்பை இரு அணிக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

இதுவரை நேருக்கு நேர்...
இரு அணிகளும் டி.20 போட்டிகளில் இதற்கு முன் 28 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 18ல் இங்கிலாந்தும், 9ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் இங்கிலாந்து 3ல் வென்றுள்ளது. டி.20 உலக கோப்பையில் இதற்கு முன் 2 முறை மோதி உள்ளன. 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் 2010ல் வெஸ்ட்இண்டீசில் நடந்த உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானை இங்கிலாந்து வீழ்த்தி உள்ளது. தற்போது 3வதுமுறையாக மோத உள்ளன.

சாம்பியன் அணிக்கு ரூ.13.30 கோடி பரிசு
நாளை பைனலில் வென்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13.30 கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும். 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.65 கோடி கிடைக்கும். அரையிறுதியுடன் வெளியேறிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு தலா ரூ.4.56 கோடியும், சூப்பர் 12 சுற்றில் வெளியேறிய 8 அணிகளுக்கு தலா ரூ.57 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இறுதி போட்டி மழையால் கைவிடப்பட்டால் முதல் 2 இடத்திற்காக பரிசுத்தொகை மொத்தமாக பிரித்து வழங்கப்படும். இவை தவிர தொடர்நாயகன், ஆட்டநாயகன், சிறந்த இளம்வீரர் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

உடற்தகுதி இல்லாத ரோகித்சர்மா
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் தனது யூ டியூப் சேனலில் கூறியிருப்பதாவது: ரோகித் சர்மாவை விட சிறந்த வீரர் இல்லை. ஆனால் உடற்தகுதியும் மிக முக்கியமான அம்சம். நீங்கள் அணிக்கு கட்டளையிட்டு அவர்களிடமிருந்து 100 சதவிகிதம் எதிர்பார்க்கும் போது, ​​நீங்கள் பீல்டிங்கில் மெதுவாக இருக்கிறீர்கள். நீங்கள் பெரிய ஷாட்களை விளையாடி, மற்றவர்களுக்கு கிரவுண்ட் ஸ்ட்ரோக்குகளை விளையாடவும், ஆபத்தான ஷாட்களை விளையாட வேண்டாம் என்றும் அறிவுறுத்துங்கள்.

வார்த்தைகள் தேவையில்லை, உங்கள் செயல்களின் மூலம் காட்ட வேண்டும். இந்திய அணிக்கு வரும் இளைஞர்கள் சிறந்த கிரிக்கெட் வீரர்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் சிறந்த உடற்தகுதி இல்லை. மறுபுறம், இங்கிலாந்து வீரர்களைப் பாருங்கள், அவர்கள் மிகவும் பொருத்தமாக இருக்கிறார்கள். அவர்கள் சிக்சர்களை மட்டும் அடிக்காமல் விக்கெட்டுகளுக்கு இடையேயும் வேகமாக ஓடுகிறார்கள். அவர்களின் பீல்டிங்கைப் பாருங்கள், வித்தியாசம் தெரியும், என தெரிவித்துள்ளார்.

பில்லியன் டாலர் லீக்குகளை விட பாகிஸ்தான் வீரர்கள் சிறந்தவர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கூறியிருப்பதாவது: ‘பில்லியன் டாலர் லீக் கிரிக்கெட்(ஐபிஎல்) வீரர்களை விட பாகிஸ்தான் வீரர்கள் சிறந்தவர்கள். 1992 உலகக் கோப்பையை வென்ற இம்ரான் கானின் அணியை விட பாபர் அசாம் மிகவும் நிதானமாக இருக்கிறார். 1992 உலக கோப்பைக்கும் தற்போதும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் உள்ளன. அப்போது, ​​இறுதிப் போட்டியில் எதிரணி(இங்கிலாந்து) 15 பேருடன் விளையாடினாலும், நாங்கள் தோற்கப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும். பாபர் அசாம் எங்களை விட நிதானமாக இருக்கிறார். இறுதிப் போட்டிக்கு முன் நாங்கள் பயந்தோம். இப்போது அவர்கள்(இங்கிலாந்து) அந்த தருணத்தை அனுபவிக்கிறார்கள், பார்க்க மனதுக்கு இதமாக இருக்கிறது, என்றார்.

Tags : UK ,Pakistan Palaperite ,T20 World Cup Final ,Melbourne , England-Pakistan Test in T20 World Cup Final Tomorrow: Threatening Rain in Melbourne
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...