வேலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து தீவிரம் முதியோர் தனியாக வசிக்கும், பூட்டிய வீடுகளை இ-பீட் செயலி மூலம் போலீசார் கண்காணிப்பு

* முதற்கட்டமாக 3 காவல் நிலையங்களில் அமல்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 காவல்நிலையங்களில் இ-பீட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியாக வசிக்கும் முதியோர், பூட்டியே கிடக்கும் வீடுகளை தினந்தோறும் போலீசார் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை அதிநவீனமுறையில் கனிணி முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை கண்காணிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமிராக்களை பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.

இரவு நேரங்களில் வீடு புகுந்து திருடுவது, பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடிப்பது, தனியாக உள்ள முதியோர்கள் மீது தாக்குதல் நடத்தியும், கொலை செய்யும் சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் இ-பீட் திட்டம் கொண்டு வந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இந்த இ-பீட் திட்டம் ஒரு சப்-டிவிஷனுக்கு ஒரு காவல்நிலையத்தில் அறிமுகம் செய்துள்ளனர். அதன்படி வேலூர் சப்-டிவிஷனுக்குக்கு வடக்கு காவல் நிலையம், காட்பாடி சப்-டிவிஷனுக்கு காட்பாடி காவல் நிலையம், குடியாத்தம் சப்-டிவிஷனுக்கு குடியாத்தம் டவுன் காவல் நிலையம் என 3 காவல் நிலையங்களில் நடைமுறைப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: காவல்துறையில் புதிதாக இ-பீட் என்ற பெயரில் புதிதாக ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் 3 காவல்நிலையங்களில் தொடக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு உட்பட்ட தங்களது பகுதிகளில் பூட்டியே கிடக்கும் வீடுகள் மற்றும் தனியாக உள்ள முதியோர்கள் குறித்த விவரங்கள் அந்த ஆப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆப் மூலம் தினந்தோறும் காலை மற்றும் மாலையில் போலீசார் நேரில் சென்று கண்காணிக்கப்பார்கள். அங்கிருந்து லொக்கேஷனை ஆன் செய்ய வேண்டும்.  போலீசார் வேறு இடத்தில் இருந்து பதிவு செய்தால் அது தெரிந்துவிடும். அப்படி செய்தால் போலீசாரே சிக்கிக்கொள்வார்கள். கட்டாயம் இருவேளைகளிலும் ரோந்து செல்லும் போலீசார் சம்பவ இடத்துக்கு ெசன்று வர வேண்டும்.

எனவே பொதுமக்கள் பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தால் அல்லது பல மாதங்களாக பூட்டி கிடக்கும் வீடுகள் மற்றும் தனியாக வசிக்கும் முதியோர்கள் தங்களது காவல் நிலையத்தில் தெரிவித்தால் அவர்கள் விவரங்கள் பதிவு செய்து கொள்ளுவார்கள். இதை பயன்படுத்தி குற்றச்சம்பவங்கள் தடுக்க முடியும். மேலும் மாவடடத்தில் இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: