திருச்செங்கோட்டில் மாரியம்மன் தெப்போற்சவம் : கொட்டும் மழையில் திரண்ட பக்தர்கள்

திருச்செங்கோடு : திருச்செங்கோட்டில் மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு பெரிய தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடந்தது. இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.  திருச்செங்கோட்டில் நேற்று மாலை, அரை நூற்றாண்டுக்குப்பின் பெரிய தெப்பகுளத்தில் மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு, தெப்போற்சவம் நடந்தது.

இதற்கான தெப்பத்தை திருச்சி சமயபுரம் தெப்போற்சவம் நடத்தும் குழுவினர் வடிவமைத்தனர். மலர்களால் தெப்பத்தேர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலை 4.30 மணியளவில் பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், கனிமுத்து மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் கோயில்களிருந்து சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக வந்து, பெரிய தெப்பகுளத்தை அடைந்தன.

தெப்பத்திற்கு சிறப்பு பூஜை நடந்த பிறகு  தெய்வங்கள் தெப்பப்தேருக்கு சென்றன. தெப்பத்தேர் குளத்தின் மையத்திற்கு சென்ற பிறகு, மாரியம்மன்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கூடியிருந்த மக்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டனர்.

கொட்டும் மழையிலும் குடும்பங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடை பிடித்தபடி தெப்போற்சவத்தில் பங்கேற்றனர். மாலை 5.30 மணியளவில் தெப்போற்சவம் நிறைவுற்றது. தெப்பத்தை இயக்கியவர்கள், படகில் சென்றவர்கள், அர்ச்சகர்கள் பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட் அணிந்திருந்தனர். தெப்பம் 22அடி அகலமும், 10அடி உயரமும் கொண்டிருந்தது. தெப்போற்சவத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தார்.

கலெக்டர் ஸ்ரேயா சிங், ஆர்டிஓ கௌசல்யா, டிஎஸ்பி மகாலட்சுமி,  தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம், அறநிலையதுறை செயல் அலுவலர் ரமணிகாந்த், நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணமுருகன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: