×

பரம்பிக்குளம் அணையில் இரும்பாலான புதிய ஷட்டர் அமைக்கும் பணி தீவிரம்

ஆனைமலை :பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அடுத்துள்ள கேரள எல்லையில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையில் இரும்பாலான புதிய ஷட்டர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திற்குட்பட்ட (பிஏபி), டாப்சிலிப் அருகே கேரள எல்லையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணையில், பருவமழையால் தண்ணீர் வரத்து அதிகரித்ததுடன், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு முழு அடியையும் எட்டியது.

இதனால், மூன்று மெயின் ஷட்டர் வழியாக, அடிக்கடி உபரி நீர் திறக்கப்பட்டது.  இந்நிலையில், தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் கடந்த செப்டம்பர் 21ம் தேதி அதிகாலையில், பரம்பிக்குளம் அணையில் உள்ள இரண்டாவது மெயின் ஷட்டர் உடைந்ததுடன், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான கன அடி தண்ணீர் உபரியாக வெளியேறியது.

இதையடுத்து, பரம்பிக்குளம் அணையில் போர்க்கால அடிப்படையில் புதிய ஷட்டர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரூ.7.20 கோடியில் இரும்பாலான புதிய ஷட்டர் அமைக்கும் பணி, மூன்று வாரத்துக்கு முன்பு துவங்கப்பட்டது. திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட ராட்சத இரும்பு தளவாட பொருட்களை கொண்டு, 27 அடி உயரம் 45 அடி அகலத்தில் புதிய ஷட்டர் அமைக்கும் பணியை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த வாரம் முதல் அணையின் இரண்டாவது கண் பகுதியில் ராட்சத கிரேன் கொண்டு ஷட்டர் பொருத்தும் பணியும், இணைப்புக்கு வெல்டிங் அடிக்கும் பணியும் இரவு பகலாக  தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணியை இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிஏபி திட்ட அணைகளில், இதுபோன்ற ஷட்டர் உடைப்பு ஏற்படாமல் இருக்க, பொதுப்பணித்துறையினர் கண்காணித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘பரம்பிக்குளம் அணையின் மூன்று மெயின் மதகுகளில், கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி கனமழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிப்பால், தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் இரண்டாவது ஷட்டர் உடைந்தது. இதனால், மொத்த கொள்ளளவான 17.25டிஎம்சி தண்ணீரில், சுமார் 5.25டிஎம்சி தண்ணீர் உபரியாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அணையின் நீர்மட்டம் 42 அடியாக குறைக்கப்பட்டவுடன், கடந்த மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து புதிய ஷட்டர் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் ஷட்டர் அமைக்கும் பணி இரவும், பகலாக நடக்கிறது. சுமார் 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில், ஷட்டர் அமைப்பு பணியை மேலும் துரிதபடுத்தி, விரைவில் நிறைவு செய்து செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Tags : Parambikulam dam , Anaimalai, Pollachi, Parambikulam Dam
× RELATED காண்டூர் கால்வாயில் கசிவு: வீணாகும் பிஏபி தண்ணீர்