×

தூங்கா நகரத்தில்.. தூங்கும் எய்ம்ஸ்... பிரதமர் அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றம்

மதுரை : திண்டுக்கல் காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்குவது குறித்த அறிவிப்பு ஏதாவது அவரது பேச்சில் வெளிவரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஏதும் அறிவிப்பில்லாததால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஒன்றிய அரசு அறிவித்தது. இதனை அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லியால் அறிவித்தார். இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் முதன்மையானதாக கருதப்படும் எய்ம்ஸ் நம் மாநிலத்துக்கு வருவதை அறிந்து மக்கள் உயர் தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

வெறும் அறிவிப்போடு நின்ற இந்த எய்ம்ஸ் அமையும் இடம் தேர்வு செய்யவே 3 ஆண்டுகளானது. பின்னர் ஒரு வழியாக 2018ம் ஆண்ஐ ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.

அதே காலக்கட்டத்தில் அறிவிக்கப்பட்ட பிற எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று ஒன்றிரண்டு திறக்கப்பட்டும் விட்டது. மேலும் சில எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஆனால், 2022ம் ஆண்டில் திறக்கப்பட வேண்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே, பணிகள் எதுவுமே துவங்காமல் அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது. இன்றளவில் மதுரை எய்ம்ஸ் வெறும் பொட்டல்காடாக காட்சியளிப்பதுடன், ஆறரை ஆண்டுக்கும் மேலாக கானல் நீராக ஏமாற்றப்பட்டு வருகிறது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என அறிவித்த பின் 6 மாதங்கள் கழித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2019ல் பாராளுமன்ற தேர்தல் தேர்தல் நெருங்கிய வேளையில், 2019 ஜனவரி 27ல் மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒருவழியாக ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் மார்ச் 2021ல் செய்யப்பட்டது.

கடன் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணி துவங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னும் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இதனால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து மதுரை மக்கள் கூறும்போது, ‘தமிழ்நாட்டுக்கு பின் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் எல்லாம் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் மதுரை எய்ம்ஸ்க்கு மட்டுமே காரணங்கள் கூறப்பட்டு காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றது. நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து என்று காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் தற்போது எப்போது கட்டுமான பணிகள் துவங்கும் என தெரியாமல் தவிக்கிறோம். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கு வருகை தந்த பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற அறிவிப்பும் பொய்த்து விட்டது’ என்றனர்.

Tags : Dunga ,AIIMS , Madurai, AIIMS, PM Modi
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...