×

வெள்ளம் பெருக்கெடுத்தால் முடங்கும் மக்கள் கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க கோரிக்கை

போடி : போடி அருகே முந்தல் சாலையில் ஆண்டி ஓடை அருகே பிரிவிலிருந்து பாண்டி முனீஸ்வரன் கோயில் சாலை அமைந்துள்ளது. இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் மேலப்பரவு பகுதியில் உள்ள மலைகிராமத்தில் மலைவாழ் மக்கள் சுமார் 26 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் போடியில் இருந்து அவர்களின் மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் கொட்டகுடியாறு தடுப்பணையுடன் அமைந்துள்ளது.

இந்த ஆற்றின் இருபுறங்களிலும் மா, தென்னை, காய்கறிகள், கரும்பு, பாக்கு, இலவு மற்றும் மேலப்பரவு ஒட்டியுள்ள வடக்கு மேற்கு மலைப்பகுதியில் காபி போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதிகளை சுற்றி பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் இருப்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து இச்சாலையில் பயணித்து வருகின்றனர்.

இந்த மேலப்பரவு மலைக்கிராத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு வீடுகள் இல்லாத காரணத்தால் கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டு காலனியாக மாற்றப்பட்டது. தொடர்ந்து இங்கு குடியிருந்து அருகில் உள்ள தோட்ட பகுதிகளுக்கும், மலைப்பகுதிகளுக்கும் அவர்கள் கூலி வேலைக்கு சென்று திரும்புகின்றனர். பொதுவாக குரங்கணி கொட்டகுடி பகுதியிலிருந்து வருகின்ற நீண்ட நெடிய அகன்ற கொட்டகுடி ஆறு இப்பகுதியில் கடந்து செல்கிறது.

இந்த ஆற்றில் மழையால் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுக்கும் நேரங்களில் இப்பகுதியில் விவசாயிகளும், மேலப்பரவு மலைவாழ் மக்களும் ஆற்றினை கடந்து செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது. சாதாரணமாக விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் தங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, ஜவுளி, நகை என அனைத்திற்கும் 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள போடி நகருக்கு வந்து செல்ல வேண்டியதாக உள்ளது.

இந்த ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் செல்லும்போது பொதுமக்கள் கவலையின்றி ஆற்றினை எளிதில் கடந்து செல்கின்றனர்.ஆனால் வருடத்தில் எட்டு மாதங்கள் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நேரங்கள் மட்டுமின்றி திடீரென பெய்யும் சாதாரண மழையிலும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. அது போன்ற நேரங்களில் ஆற்றினை கடக்க முடியாத நிலை ஏற்படும் போது விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இப்பிரச்னை தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக போடி எம்எல்ஏவும், துணை முதல்வருமாக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திடம் நேரடியாக இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.

இதற்கிடையே கடந்த சட்டமன்ற தேர்தலின்பொது இங்குள்ள மக்களின் ஒட்டுகளை பெற வேண்டும் என்பதற்காக விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்களை ஓபிஎஸ் நேரில் சந்தித்தார். அப்போது ஆற்றுப்பகுதியை பார்வையிட்டு விரைவில் பாலம் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் அதற்கான பணிகள் நடைபெறவில்லை.

தற்போது வடகிழக்க பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் அவர்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ள தொகுப்பு வீடுகளுக்குள் முடங்குகின்றனர்.
இதுபோன்ற நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளை பிடித்துக்கொண்டும் , கயிறு கட்டிக்கொண்டும் ஆபத்தான முறையில் ஆற்றினை கடந்து செல்கின்றனர். விவசாயிகள் உணவு பொருட்கள், உரம், பூச்சி மருந்து மற்றும் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே மேலப்பரவு மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kotakudi river , Bodi, Bridge,Pandi Muneeshwaran temple, Mountain people
× RELATED போடி அருகே கொட்டகுடி ஆற்றில் பாலம் அமைக்க கோரிக்கை