வடசென்னையின் தாழ்வான பகுதிகளிலும் உடனுக்குடன் மழைநீர் வெளியேற்றம்: விடிய விடிய களப்பணியில் மாநகராட்சி ஊழியர்கள்

சென்னை: தொடர் மழை காரணமாக வடசென்னையின் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் பணியில் விடிய விடிய மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் 300 மி.மீ., மழை பெய்தது. எனவே, சென்னை வழக்கம் போல தண்ணீரில் மிதக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், விரைந்து மழைநீர் வடிந்தது பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. மாநகராட்சியின் சிறப்பான நடவடிக்கைகளால் மழை பெய்த சுவடே இல்லாமல் நீர் வேகமாக வெளியேற்றப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் சென்னை மாநகராட்சி மூலம் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டதால் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டு உடனடியாக வெளியேறியது. வடசென்னையில் மட்டும் ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அங்கும் மோட்டார்கள் மூலம் மழைநீர் விரைந்து வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது கனமழை கொட்டியது.   ஆனால் இது வெறும் தொடக்கம் தான் என்றும், அடுத்த 3 நாட்களுக்கு கனமழையின் வீரியம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதலே கனமழை தொடங்கினாலும், அதிகாலை 4 மணியளவில் தீவிரமடைந்தது.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கேகே நகர், அசோக் பில்லர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையிலும் கனமழை பெய்தது. இதேபோன்று வடசென்னை பகுதிகளான பட்டாளம், புளியங்தோப்பு, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீர் ஆங்காங்கே தேங்கியது. ஆனால் மழை குறைந்த, சில மணி நேரத்தில் ராட்சத மோட்டார்கள் மூலம் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஜீவா சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காதது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுதியுள்ளது. கடந்த வாரம் மழையின் போது வடசென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து அந்த பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டது. இதனால் நேற்று பெய்த கனமழையால் தேங்கும் மழைநீர் ராட்சத மோட்டார்கள் மற்றும் சாதாரண மோட்டார்கள் மூலம் வேகமாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் விடிய விடிய ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்த போதும் வடசென்னையில் மழைநீர் தேங்காதது அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வடசென்னை பகுதியில் உள்ள மக்கள் கூறுகையில், வடசென்னை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறிய மழைக்கே இடுப்பளவு தண்ணீர் நிரம்பிவிடும். ஆனால் நடப்பாண்டில் அப்படியில்லை. மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது. இவ்வளவு கனமழையிலும் தண்ணீர் தேங்காதது மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் நிற்காத நிலையிலும் அனைவரும் பணிக்கு சென்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: