×

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு

சென்னை: வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அதிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் போன்ற ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

 பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் நேற்று நிலவரப்படி  1065 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.  மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக 290 கன அடி நீர் வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் மற்றும் மெட்ரோ குடிநீருக்காக 53 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2738 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்வரத்து  558 கன அடி‌. சென்னை மக்களுக்காக 500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.   

சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான  1081 மில்லியன் கன அடியில் 310 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 200 கன‌அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது, 2571 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர், மழைநீர் என 330 கனஅடி நீர் வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அதேபோல் கண்ணன்கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது முழு கொள்ளளவை எட்டி 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் தற்போது 7184 மில்லியன் கன அடி  நீர் இருப்பு உள்ளதாக  நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   



Tags : Tiruvallur ,Chennai , Due to the heavy rain in Tiruvallur district, the water level of the lakes that provide drinking water to the people of Chennai has risen significantly
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற...