×

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் புதிய வடிகால் அமைக்கும் பணியை நீர்வளத்துறை தொடங்கி உள்ளது. இந்த சதுப்பு நிலம் மழை காலத்தில் அதிக நீரைத் தேக்கி வைத்துக்கொண்டு, கோடை காலத்தில் சீராக வெளிவிடும் திறன் உண்டு. அதுமட்டுமின்றி 350க்கும் மேற்பட்ட உயிரினங்களுக்கும், 200க்கும் மேற்பட்ட தாவரங்களுக்கும் வாழ்க்கையளிக்கும் பல்லுயிர் வாழ்விடமாக திகழ்கிறது. அதில், ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால் அது சூழலியலுக்கு சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

சதுப்பு நிலத்தில் புதிய கால்வாய் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே, பயன்பாட்டில் இருந்து தூர்ந்து போன கால்வாயைத் தான் தூர்வாரி, அதன் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வரும் கூடுதல் நீரை பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுக்காடு பகுதியில் வங்கக் கடலில் கலக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், அண்மைக்காலங்களில் அப்பகுதியில் எந்த கால்வாயும் இல்லை. இப்போது புதிய கால்வாயை தோண்டினாலும், இருந்த கால்வாயை தூர் வாரினாலும் நிலத்தின் தன்மையை மாற்றி விடும் என்பதுதான் உண்மை.

அதேபோல், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கால்வாய் அமைத்தாலோ, ஆழப்படுத்தினாலோ, அதன் தண்ணீரை தேக்கி வைக்கும் திறன் பறிபோய்விடும். மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கடல் மட்டத்தை விட கீழாக இருக்கிறது. அதில் கால்வாய் அமைத்தாலோ, தூர்வாரினாலோ அதன் மட்டம் மேலும் குறைந்து விடும். அதனால் கடல் நீர் சதுப்பு நிலத்திற்குள் நுழைந்து விடும் ஆபத்து உள்ளது.  இந்த சதுப்பு நிலம் உலக முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் அடையாற்றின் உட்புறத்தில் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்தது. தற்போகது ஆக்கிரமிப்பு காரணமாக 1,725 ஏக்கராக சுருங்கி விட்டது. இழந்த நிலங்களை மீட்டெடுத்தல், அதன் பல்லுயிர் வாழும் சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஈர நிலங்கள் பட்டியலில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சேர்க்கப்பட்டதற்கான நியாயயங்களை வகுப்படுத்த வேண்டும் எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த ஆணையிட வேண்டும். அதற்கு பதிலாக இழந்த பரப்பை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : Ramadas ,Bamaka , Pallikarana Swamp, Canal work, to be stopped, Pamaka, Ramadoss, insistence
× RELATED ஓய்வுக்கு பிறகு மீண்டும் பிரசாரம்: ராமதாஸ் கடிதம்