ஆதிதிராவிடர், பழங்குடியினர் தாட்கோ மூலம் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அழைப்பு

சென்னை: தாட்கோ மூலம் ஆவின் பாலகம் அமைக்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம், என்று சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: 2022-23ம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பின்படி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட தற்போது அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் அரசாணையில் வெளியிடப்பபட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடை அமைத்து ஆவின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஆவின் பாலகம் அமைக்க தாட்கோ மூலம் மின் வாகனம்,  உறைவிப்பான் (பிரிசர்), குளிர்விப்பான் (கூலர்) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ரூ.3 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 30% மானியமாக ரூ.90,000 வழங்கப்படும். ஆதிதிராவிடர் இனத்தவராக இருப்பின் //application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருப்பின் //fast.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் ஒப்பந்த நகலுடன், குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று,  சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் (ஓராண்டுக்குள் பெற்றிருக்க வேண்டும்), ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இ-விலைப்புள்ளி ஜிஎஸ்.டி எண்ணுடன் இ-திட்ட அறிக்கை , பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி தகுதி சான்றிதழ், விண்ணப்பதாரர் கடன் கோரும் தொழிலில் முன்அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 18 முதல் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம். தொலைபேசி எண். 044-25246344, கைபேசி எண். 9445029456 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: