×

சென்னையில் கொட்டும் மழையில் மழைநீர் அகற்றும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு:

பெரம்பூர்: சென்னையில் கொட்டும் மழையில் மழைநீர் அப்புறப்படுத்தும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, சென்னையில் நேற்று முன்தினம் மாலை முதல் பெய்த கனமழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில், இந்தாண்டு தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் வடிந்ததால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு உடனடியாக திரும்பினர்.

இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், சில இடங்களில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதை, கொட்டும் மழையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட தமிழர் வீதி, வேலாயுதம் தெரு, கெங்கு ரெட்டி சாலை, ஆண்ட்ரூ தேவாலயம், ஜி.பி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட அங்காளம்மன் கோயில் தெரு, புளியந்தோப்பு, மில்லர் சாலை, அம்பேத்கர் சாலை மற்றும் கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



Tags : Minister ,K.N. Nehru ,Chennai , Chennai, pouring rain, rainwater removal work, Minister KN Nehru, study
× RELATED கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு...