தண்டையார்பேட்டையில் வடமாநில வாலிபர்களிடம் செல்போன், பணம் பறிப்பு: 2 பேர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் வடமாநில வாலிபர்களிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சக்ரி ஆலன் கான் (26), முகமது ஆசிக் அலி (30). இவர்கள் கடந்த 3 வருடங்களாக தண்டையார்பேட்டை, ராஜிவ்காந்தி நகர் 4வது தெருவில் வாடகை வீட்டில் தங்கி, கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, இவர்கள் கொடுங்கையூரில் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வந்தனர். நேரு நகர் 14வது தெருவில் வந்தபோது, அங்கு நின்றிருந்த ஒரு மர்ம கும்பல் இவர்களை வழிமறித்தது.

பின்னர், 2 பேரையும் சரமாரி தாக்கி, அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றது. இதுகுறித்து, அவ்வழியே வந்த ரோந்து போலீசாரிடம் 2 வடமாநில வாலிபர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தனர். அதில், தண்டையார்பேட்டை, நாவலர் குடியிருப்பை சேர்ந்த சந்தோஷ்குமார் (20), குமரன் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சந்தோஷ்குமாரை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Related Stories: