×

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2013ல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் ஒரு தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி தோனி 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இந்த வழக்கில் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பதில் தருமாறு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பதில்மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி மீது எம்.எஸ்.தோனி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தெரிவித்துள்ள கருத்துகள், நீதிமன்றங்களை களங்கப்படுத்தும் வகையில் இருப்பதுடன், நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில் உள்ளது.

எனவே, அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் அனுமதியை பெற்றே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.



Tags : IPS ,Sampath Kumar ,Dhoni , Dhoni, contempt of court case, Sampathkumar, to appear in person, High Court, order
× RELATED இடஒதுக்கீட்டில் ஐபிஎஸ் ஆன...