×

1,207 நகர பேருந்துகள் கொள்முதலுக்கான டெண்டருக்கு தடை கோரி பொதுநல வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 1,107 நகர பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டருக்கு தடை கோரிய மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக போக்குவரத்து துறை சார்பில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 900 மில்லி மீட்டர் உயர தளத்துடன் கூடிய 1,107 நகர பேருந்துகள் உள்பட  1771 பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக அக்டோபர் 10ம் தேதி டெண்டர் கோரப்பட்டது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் 400 முதல் 650 மில்லி மீட்டர் உயர தளத்துடன் நகர பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு பதில் 900 மில்லி மீட்டர் உயர தளத்துடன் கூடிய பேருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது சட்டவிரோதமானது எனக் கூறி சென்னையைச் சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்துக்கு முரணாக இந்த பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டும் இதேபோல பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியபோது அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சட்டப்படி பேருந்துகளை கொள்முதல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், 900 மில்லிமீட்டர் உயர தளத்துடன் கூடிய பேருந்தில் மாற்றுத் திறனாளிகளால் ஏற முடியாது என்பதால்,  1107 பேருந்துகள் கொள்முதல் தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும். அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று  கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.



Tags : ICourt ,Tamil Nadu government , 1,207 City Bus, Procurement, Tender, Prohibition Case, Government of Tamil Nadu, Court Order
× RELATED ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை...