×

23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த இளையராஜா, ராமராஜன்

சென்னை: தமிழில் கடந்த 45 வருடங்களாக நடித்து வருபவர், ராமராஜன். உதவி இயக்குனராக இருந்து சிறிய வேடங்களில் நடித்து, பிறகு 1986ல் ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர், 1987ல் ‘ஒன்று எங்கள் ஜாதியே’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கடைசியாக 2012ல் ரிலீசான ‘மேதை’ படத்தில் நடித்திருந்த அவர், தற்போது 10 வருட இடைவெளிக்குப் பிறகு ‘சாமானியன்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கின்றனர். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார். அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.ராகேஷ் எழுதி இயக்குகிறார்.

ஏற்கனவே  அவர் ‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ ஆகிய  படங்களை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், சினேகன் பாடல்கள் எழுதுகின்றனர். இளையராஜா இசை அமைக்கிறார். ராமராஜனின் வெற்றிக்கு காரணமானவர்களில் இளையராஜா மிகவும் முக்கியமானவர் என்பதால், சில நாட்களுக்கு முன்பு இளையராஜாவை சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற ராமராஜன், இளையராஜாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘பல வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளேன். என் படத்துக்கு நீங்கள்தான் இசை அமைக்க வேண்டும்’ என்றார். அதற்கு  இளையராஜா சிரித்தபடி, ‘பண்ணிட்டா போச்சு’ என்றார். ‘சாமானியன்’ படத்தில் 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். இதற்கு முன்பு 1999ல் ராமராஜன் நடித்த ‘அண்ணன்’ என்ற படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.


Tags : Ilayaraja ,Ramarajan , 23 years, reunited, Ilayaraja, Ramarajan
× RELATED ஆமாம், நான் எல்லோருக்கும்...