தொடர்ந்து சினிமாவில் நடிப்பேனா?: உதயநிதி ஸ்டாலின் பதில்

சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள படம், ‘கலகத் தலைவன்’. மற்றும் நிதி அகர்வால், ஆரவ், கலையரசன், அங்கனா ராய் நடித்துள்ளனர். கே.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படப்பிடிப்பு 120 நாட்களுக்கு மேல் நடந்துள்ளது. இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. அடுத்து ‘கண்ணை நம்பாதே’ படத்தில் நடிக்கிறேன். ‘சைக்கோ’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘கலகத் தலைவன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களின் 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால், நான் ‘மாமன்னன்’ படத்தை முடித்துவிட்டு, என் போன் நம்பரை மாற்றிவிட்டு எஸ்கேப் ஆகப்போகிறேன். நிறைய வேலைகள் இருக்கிறது. தமிழ் சினிமாவையே நான்தான் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது போல், நான் நடிப்பதை நிறுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

இன்னும் நான் நடிக்கவே தொடங்கவில்லை. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாகப் பேசினார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி, தயாரிப்பாளர்கள் அர்ச்சனா கல்பாத்தி, லலித் குமார், இயக்குனர்கள் மிஷ்கின், சுந்தர்.சி, ராஜேஷ்.எம், அருண்ராஜா காமராஜ், மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன், நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால், பாபி சிம்ஹா, பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, பிரியன் கலந்துகொண்டனர்.

Related Stories: