தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு செம்பரம்பாக்கம், புழல் ஏரியிலிருந்து 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தலா 500 கனஅடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கரையோர மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4  நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து  வருகிறது.

குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று  முன்தினம் பொன்னேரியில் 69 மி.மீ, சோழவரத்தில் 61 மி.மீ, செங்குன்றத்தில் 54 மி.மீ, ஜமீன் கொரட்டூரில்  47 மி.மீ, ஆவடியில் 45 மி.மீ, பூந்தமல்லியில் 39 மி.மீ, திருவள்ளூர் மற்றும்  ஊத்துக்கோட்டையில் 36 மி.மீ, கும்மிடிப்பூண்டியில் 32 மி.மீ, பூண்டியில் 31 மி.மீ,  திருத்தணியில் 13 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள்  ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரிக்க  தொடங்கியுள்ளது.அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 19.87  அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,571 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 330  கன அடியாகவும் உள்ளது. இதனால், 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து, கனமழை நீடிக்கும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்  வழக்கத்திற்கு மாறாக 20 அடிக்கு கீழ் சென்றுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின்  நீர்மட்ட உயரத்தை 18 அடியிலிருந்து 19 அடி வரை வைத்து கண்காணிக்க  பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், கனமழை  நீடித்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் அதிகமாக திறந்தால்,  அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடாது என்ற அச்சத்தில், தொடர்ந்து  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரானது 500 கனஅடி என்ற அளவில்  சீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மழை பெய்து ஏரிக்கு  நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பது  அதிகரிக்கப்படும். இதனால், அதிகாரிகள் ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து  வருகின்றனர். ஏரியிலிருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேறி வருவதால்,  கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுப்பணித்துறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. தற்போது 2,738 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரி மற்றும் வரத்து கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 558 கனஅடி‌ நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏரியில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொட்டும் மழையில் உபரி நீரை திறந்து விட்டனர். 2 மதகுகள் வழியாக உபரி தண்ணீர் சீறி பாய்ந்தது. இந்த உபரிநீர் கால்வாய் வழியாக சாமியார் மடம், தண்டல்கழனி, கிருஷ்ணா நகர், தமிழன் நகர், திருநீலகண்ட நகர், பாலாஜி நகர், வடபெரும்பாக்கம், கொசப்பூர் வழியாக எண்ணூர் கடலில் கலக்கிறது. இந்த தண்ணீர் திறப்பால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: