×

தென் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயில் இன்று முதல் இயக்கப்படும்

சென்னை: சென்னை-மைசூரு இடையே தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை நேற்று  பிரதமர் மோடி பெங்களூருவில் தொடங்கி வைத்தார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை வந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 2022-23ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்படும் என அறிவித்தார். சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயிலை தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்த ரயிலை தயாரிக்க ரூ.90 கோடி முதல் 120 கோடி வரை செலவாகிறது.

இந்த ரயில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பம், வடிவமைப்பில் தயாரிக்கப்படுகிறது. வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் ரயிலாக வந்தே பாரத் இருக்கும். டிரெயின் 18 ரயில் வடிவமைக்கப்பட்டபோது, ஓட்டுநர் இல்லாமல் இயங்கக் கூடியதாகவும், சுய உந்துதல் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டது.

தற்போது, டெல்லி - வாரணாசி, டெல்லி-மாதா வைஸ்னோ தேவி கத்ரா, காந்தி நகர்-மும்பை மற்றும் இமாச்சல்-உனா ஆகிய வழித்தடங்களில் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று 5வது வந்தே பாரத் ரயிலின் சேவை, சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே பிரதமர் மோடியால் பெங்களூருவில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம், தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இது, 16 பெட்டிகளை கொண்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - மைசூரு - சென்னை சென்ட்ரல் இடையே இன்று முதல்  வாரத்தில் 6 நாட்கள் (புதன்கிழமை தவிர) இரு முனைகளில் இருந்தும் இயக்கப்படும். காட்பாடி, கேஎஸ்ஆர் பெங்களூருவில் மட்டுமே இது நிறுத்தப்படும்.

*புறப்படும் நேரங்கள்

* சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு காலை 5.50 மணிக்கு புறப்படும். காட்பாடியில் காலை 7.21 முதல் 7.25 வரை நிற்கும். காலை 10.20 முதல் 10.25க்குள் பெங்களூரு சென்றடையும். மதியம் 12.25 மணிக்கு மைசூரு சென்றடையும்.

*  மைசூருவில் இருந்து சென்னைக்கு மதியம் 1.05 மணிக்கு புறப்படும். பெங்களூருக்கு மதியம் 2.55 முதல் 3 மணிக்குள் வரும். காட்பாடிக்கு மாலை 5.36 முதல் 5.40 மணிக்குள் வரும். இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தடையும்.

* சென்னையில் இருந்து மைசூருக்கு சேர் கார் வகுப்பில் செல்ல ரூ.1000 கட்டணம். எக்ஸிகியூடிவ் கார் வகுப்பில் செல்ல ரூ.1980 வசூலிக்கப்படும். குழந்தைகளுக்கும் முழு டிக்கெட் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் சலுகை, குழந்தைகள் கட்டண சலுகை வழங்கப்படாது. முழு கட்டண டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். முன்பதிவு செய்தல், ரத்து செய்தல், பணத்தை திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கான பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், சதாப்தி ரயில்களில் உள்ளது போல் இருக்கும்.


Tags : South India , South India's first ever Chennai-Mysore Vande Bharat train to run
× RELATED முட்டை உற்பத்தியில் முதலிடம்...