மதுரை விமானநிலையத்தில் வரவேற்பு ஓ.பி.எஸ்சுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்: எடப்பாடி கடுப்பு

மதுரை: காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடி மதுரை விமானநிலைய வரவேற்பின்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் அளித்ததால், எடப்பாடி பழனிசாமி கடுப்பானார். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் வந்தடைந்தார். மதுரை வந்த பிரதமர் மோடியை தமிழக அரசு சார்பில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, நேற்று பகல் 11.30 மணிக்கு விமானத்தில் சென்னையில் இருந்து மதுரை விமானநிலையம் வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம்  விஸ்வநாதன், உதயகுமார் மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் விமான நிலையத்திற்குள் சென்றனர். பிரதமரை வரவேற்க பகல் 1 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் எம்பிக்கள் ரவீந்திரநாத், தர்மர், எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், ஐயப்பன், முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்திற்குள் சென்றனர்.

மதுரை வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களுடன் தலா 5 பேர், மற்றும் பாஜவினர் 24 பேர் மற்றும் அதிகாரிகள் உள்பட 42 பேர் வரிசையில் நின்று வரவேற்க அனுமதிக்கப்பட்டது. எதிர்கட்சி தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள், பின்னர் ஓ.பன்னீர்செல்வம், அவருடன் வந்தவர்கள் என வரிசையாக நின்றிருந்த நிலையில், இருவரும் மிகுந்த இடைவெளி விட்டு நின்று பிரதமர் மோடியிடம் பூங்கொத்துடன் காத்திருந்தனர்.  

எடப்பாடி பழனிசாமியிடம் முதலில் பூங்கொத்தை பெற முயன்ற பிரதமர் மோடி, வரிசையில் சற்று தள்ளி இருந்த ஓ.பன்னீர்செல்வத்தையும் அருகே வருமாறு அழைத்து, இருவரிடம் இருந்து ஒரே நேரத்தில் பூங்கொத்தை பெற்றுக் கொண்டார். ஓ.பி.எஸ்சுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்ததை பார்த்து எடப்பாடி பழனிசாமி கடுப்பானார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக பிரதமர் மோடி  கிளம்பினார். விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் தங்கி, திரும்ப வரும் பிரதமரை சந்தித்துப் பேச திட்டமிட்டு இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அந்த அறையை நோக்கி சென்றனர்.

அப்போது விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், யாரும் இங்கு  இருக்கக்கூடாது. பிரதமர் திரும்ப வரும்போது அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டும்  வரலாம் எனக்கூறி அனைவரையும் வெளியேறும்படி அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையத்திலிருந்து வெளியேறி தனித்தனி ஓட்டல்களில் தங்கினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும்  பிரதமர் மோடியை  வழியனுப்பும் வரிசையிலும் நின்றனர். பிரதமர் மோடி அவர்களுக்கு கைகளை காட்டியபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். திரும்பும்போது  இருவரையும் சந்தித்துப் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்  பிரதமர் மோடி கண்டுகொள்ளாமல் கிளம்பிச் சென்றதால் ஏமாற்றமடைந்தனர்.

Related Stories: