×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடலோரத்தில் நீடிப்பு 17 மாவட்டங்களில் மிக கனமழை: 25 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், பல மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 25 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று மாறியது.

அத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிக்கு நேற்று நகர்ந்து வந்ததால் டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்கள் உள்பட 19 மாவட்டங்களில் நேற்று கன மற்றும் மிக கனமழை பெய்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவில் அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து உள் தமிழக மாவட்டங்களில் பரவியது. அதனால், திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்தது.

இதையடுத்து. இன்று, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். பின்னர் அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழவுப் பகுதி இன்று மாலை அரபிக் கடல் நோக்கி நகர்ந்து செல்லும்.

அப்போது தெற்கு கர்நாடகா, கேரளாவிலும் பலத்த மழை பெய்யும். இந்த நிலை 13ம் தேதி வரை நீடிக்கும். அதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதையடுத்து, இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் மழை தொடரும்.  மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும்.

இந்தநிலையில் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கடலூர், வேலூர், விழுப்புரம், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், மயிலாடுதுரை, திருவாரூர், நீலகிரி, திருச்சி, சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பத்தூர், ராமநாதபும் ஆகிய 25 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், புதுவை, காரைக்கால் பகுதிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Deep depression lingers over coast Heavy rains in 17 districts: Holiday declared for schools in 25 districts
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...