×

பொது ஏலம் அறிவிப்பு கோயில் நில குத்தகை உரிமையை பறிக்கும் நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: கோயில் நில குத்தகை பெற்றுள்ள விவசாயிகள் உரிமையை பறிக்கும் ‘பொது ஏலம்’ அறிவிக்கும் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் கோயில், மடம் மற்றும் தர்ம ஸ்தாபனங்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காலங்காலமாக குத்தகை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் கோயில் நில குத்தகை விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும் முறையில் குத்தகை விவசாயிகள் வசம் உள்ள நிலங்களை ‘பொது ஏலம்’ விடுவதாக கோயில் செயல் அலுவலர்கள் செய்திதாள்களில் விளம்பரம் செய்து வருகின்றனர். குறிப்பாக, திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் செய்திதாள்களில் வெளியிட்ட அறிவிப்பு இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு நிற்கும் காவிரி பாசன பகுதி நில குத்தகை விவசாயிகளிடம் கடுமையான பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காலங்காலமாக கோயில் நில குத்தகை பெற்றுள்ள விவசாயிகள் உரிமையை பறிக்கும் ‘பொது ஏலம்’ அறிவிக்கும் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, இந்து சமய அறநிலையத்துறையும், தமிழக அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டு கோயில் நிர்வாகத்தின் ஏல அறிவிப்புகளை ரத்து செய்யுமாறும், கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் உழுவடை உரிமையை பாதுகாக்க வேண்டும். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆண்டுகளுக்குரிய குத்தகை பாக்கியை முழுமையாக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Communist India , Public auction notices move to take away temple land lease rights: Communist India condemns
× RELATED பொது ஏலம் அறிவிப்பு கோயில் நில குத்தகை...