×

10% இடஒதுக்கீடு குறித்து இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க திட்டம்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை

சென்னை: பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து பாஜ அரசு 2019ல் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, அந்த வழக்கில் எப்படியெல்லாம் நம்முடைய வாதங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தாமல், வழக்கின் தீர்ப்பு வந்தபிறகு, தற்போது மற்ற கட்சிகளை அழைப்பது எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்?

அதிமுகவை பொறுத்தவரை எந்தவொரு இடஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக்கூடாது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பிரச்னை வந்தபோது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனைத்துக்கட்சி தலைவர்களையும் கலந்தாலோசித்து, அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க வைத்து நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து வைத்தார். மேலும், அரசியல் சாசன சட்டத்தின் 9வது அட்டவணையில் இதை சேர்த்து அதை உறுதிப்படுத்தினார்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு விஷயத்திலும், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு / மறு சீராய்வு செய்வதற்கு என்று ஆலோசனை பெறும், சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற திமுகவின் அறிவிப்பை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்  கூறினார். ஜெயக்குமாரின் இந்த அறிக்கை மூலம் இன்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்றே கூறப்படுகிறது. அதிமுக கூட்டணி கட்சியான பாஜவை எதிர்த்தால் பிரச்னை ஏற்படும் என்பதாலேயே, அதிமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று திட்டமிட்டே இதுபோன்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : AIADMK ,former minister ,Jayakumar , AIADMK plans to boycott today's all-party meeting on 10% reservation? Statement by former minister Jayakumar
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...