×

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க தமிழக அரசு முழு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் கனமழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அவசர கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தனர்.

இதுகுறித்து, அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் மழைநீர் தேங்குவதாக 34 புகார்கள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் மழையின் காரணமாக தற்போது வரை விழுந்த 92 மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு சொந்தமான அனைத்து 16 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்காமல் உயர் ரக மின் மோட்டார் இயந்திரம் மூலமாக தண்ணீர் அகற்றப்பட்டது. மேலும், கொளத்தூர் பகுதியில் மட்டும் 82 மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளது. 910 மோட்டார்கள் சென்னை மாநகராட்சியின் சார்பில் தயார் நிலையில் உள்ளது.

நேற்று (நேற்று முன்தினம்) இரவு முதல் பெய்த கனமழையால் புளியந்தோப்பு, பட்டாளம், பெரம்பூர், கொளத்தூர் பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை. மோட்டார் பம்புகளை பொருத்தி துரிதமாக மழைநீரை வெளியேற்றி வருவதே இதற்கு காரணம். அதேபோல், மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில் தவறுகள் நடந்தால் ஒப்பந்ததாரர்களுக்கு தற்போதைய சூழலில் அறிவுறுத்தல்தான் கொடுக்க முடியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பணி தாமதம் ஆகிவிடும். மேலும் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை அளித்துள்ள தகவலின்படி இன்று (நேற்று) காலை 9 மணி நிலவரப்படி, சென்னை மாநகராட்சியின் சார்பில் 906 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் மோட்டார் பம்புகள் வாயிலாக 114 இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் சராசரியாக 48.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல்  காலை 8.30 மணி நிலவரப்படி 6.4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மழை தொடர்பான புகார்களுக்கு சென்னை மாநகராட்சி மூலமாக பொதுமக்கள் புகார் அளிக்க எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் புகார் அளிக்கலாம்.

அதேபோல், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரேநேரத்தில் 2 லட்சம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கக்கூடிய அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உணவு வழங்குவதற்காக வருவாய் துறை மூலம் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், 300 தூர்வாரும் இயந்திரங்கள், கழிவுநீர் ஊர்தி வாகனங்கள் 57 தயார் நிலையில் உள்ளன. மழையின் காரணமாக மாநகராட்சி ஊழியர்கள் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மழைநீர் தேங்கும் இடங்களில் துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தண்ணீர் தேங்காத வண்ணம் அரசு மற்றும் மாநகராட்சி முழு கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Government ,Chennai ,Minister ,KN Nehru , Government is paying full attention to prevent rainwater from stagnating in Chennai: Minister KN Nehru interview
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...