பட்டாசு விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் வாண வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர், 12க்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை முறையாக மேற்கொள்வதில்லை.

அரசு அதிகாரிகள் இப்பணிகளை முறையாக மேற்கொள்ளாமலும், பட்டாசு உரிமையாளர்களுக்கு ஆதரவாக கண்டும், காணாமலும் இருப்பதே இதுபோன்ற விபத்துகள் தமிழகத்தில் தொடர்வதற்கும், மனித உயிர்கள் மடிவதற்கும் முக்கிய காரணம். எனவே, தமிழகத்தில் பட்டாசு விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.5 லட்சம் அறிவித்துள்ளார். இருப்பினும் இழப்பீட்டு தொகையை கூடுதலாக்கி ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: