×

பலியானவர்களுக்கு நிவாரண நிதி சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து தேசிய தீர்ப்பாயத்துக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து சம்பவத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் கடந்தாண்டு ஏப்ரலில் நடந்த கோர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பட்டாசு விபத்தில் பலியான ஒவ்வோரு குடும்பத்துக்கும் ரூ.20 லட்சம் வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இந்த வழக்கை விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கே வழக்கை மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ‘விபத்தில் உயிரிழந்த 27 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.20 லட்சமும், 50 சதவீத தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.15 லட்சமும், 25 முதல் 50 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்’ என்று கடந்த மார்ச் 7ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மீண்டும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இது நேற்று, நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘விபத்தில் பலியானவர்களுக்கு உரிய நிதி உதவியை மாநில அரசு வழங்குகிறது. இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தலையிட முடியாது. மக்களின் வரிப்பணத்தில் தான் நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது,’ என வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், ‘தமிழக அரசின் வாதத்தை நீதிமன்றம் புரிந்து கொள்கிறது. இருப்பினும், விதிமுறைகளை தளர்த்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரண நிதி உதவி வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி தேசிய பசுமை தீர்ப்பாய பதிவாளருக்கும் நோட்டீஸ் அனுப்பினர்.

Tags : Chatur ,National Tribunal , Relief Fund for Victims Chatur Crackers Factory Accident Notice to National Tribunal
× RELATED அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்