×

இமாச்சல், குஜராத் சட்டமன்ற தேர்தல் வரலாறு காணாத பணம், மதுபானங்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி

புதுடெல்லி: சட்டமன்ற தேர்தல் நடக்கும் இமாச்சல பிரதேசம், குஜராத்தில். இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பணம், மதுபானங்கள், இலவச பொருட்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5ம் தேதிகளி்ல 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், இத்தேர்தலில் மக்களுக்கு பணம், பரிசு பொருட்கள் போன்றவற்றை கட்சிகள் வழங்குவதை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், அவற்றையும் மீறி இந்த மாநிலங்களில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கட்டுக்கட்டாக பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் அதிகளவில் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரையில் பறிமுதல்  செய்யப்பட்ட பணம், மதுபானங்கள், பரிசுப் பொருட்களின் அளவு, 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்டதை விட 5 மடங்கு அதிகமாகும்.

இது, தேர்தல் ஆணையத்தை அதிர்ச்சி அடைய  வைத்துள்ளது. குஜராத்தில் 2017ம் ஆண்டு தேர்தலின் போது இலவசங்கள், ரொக்கம் உட்பட மொத்தம் ரூ.27.21 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது மொத்தம் ரூ.71.88 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இமாச்சலில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 9.03 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இப்போது, ரூ.50.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இமாச்சலில் 10ம் தேதி வரை ரூ.17.18 கோடி ரொக்கம், ரூ.17.5 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.1.2 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், ரூ.41 லட்சம் மதிப்புள்ள இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், குஜராத்தில் ரூ.66 லட்சம் ரொக்கம், ரூ.3.86 கோடி மதிப்பு மதுபானங்கள், ரூ.94 லட்சம் போதைப் பொருட்கள், ரூ.64.56 கோடி மதிப்புள்ள இலவச பொருட்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
* ஆம் ஆத்மியில் இணைந்தார் பாஜ எம்எல்ஏ
குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள மதார் சட்டமன்ற தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி வெற்றி பெற்றவர் கேசரிசின்க் சோலாங்கி. இந்த தேர்தலில் அவருக்கு பாஜ வாய்ப்பு வழங்காததால், அவர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.

Tags : Himachal, Gujarat ,Election Commission , Himachal, Gujarat assembly polls: Unprecedented seizure of cash, liquor: Election Commission shocked
× RELATED அண்ணாமலை வேட்புமனு ஏற்பை எதிர்த்து அதிமுக புகார்!