×

தொடர்ந்து பெய்து வரும் மழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தயார் நிலையில் நிவாரண முகாம்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தயார் நிலையில் நிவாரண முகாம்கள் வைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், கடந்த 5 நாட்களாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் காஞ்சிபுரம் மாதா கோயில் தெரு, தாமல்வார் தெரு, கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள கருக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு, ரங்கசாமி குளம், இரட்டை மண்டபம், பெரியார் நகர், விளக்கடி பெருமாள் கோயில் தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய மழையளவு (மிமீ) காஞ்சிபுரம் 37.40, ஸ்ரீபெரும்புதூர் 29.20, உத்திரமேரூர் 27.00, வாலாஜாபாத் 06.40, செம்பரம்பாக்கம் 31.20, குன்றத்தூர் 43 பதிவாகியுள்ளது.

உள்ளாவூர் மதகுஏரி, காம்மராஜபுரம் ஏரி, பழைய சீவரம் அருக்கேன்டாண் ஏரி, கரூர் தண்டலம் ஏரி, கட்டவாக்கம் ஏரி, புத்தேரி கோவிந்தவாடி சித்தேரி, பெரிய கரும்பூர் மதகு ஏரி, சக்கரவர்த்தி தாங்கள், கூரம் சித்தேரி, தாமல் கோவிந்தவாடி பெரிய ஏரி, தாமல் சக்கரவர்த்தி ஏரி, தாமல் சித்தேரி, கோவிந்தவாடி பெரிய ஏரி, வேளியூர் பெரிய ஏரி, வெளியூர் சித்தேரி ஆகிய 38 சிறிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியில் நிறைந்த மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் பகுதியில் 381 ஏரிகள் உள்ளன. இதில், 33 ஏரிகள் 76 சதவீதமும், 143 ஏரிகள் 50 சதவீதமும், 167 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன.

குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் பெரிய ஏரிகளான தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதுபோல் தென்னேரி, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், மணிமங்கலம் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. தாமல் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மால்லபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர், தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், மேடவாக்கம், நாவலூர், திருப்போருர், கேளம்பாக்கம், கோவளம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம், அச்சரப்பாக்கம், கருங்குழி, சித்தாமூர், லத்தூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் விடியவிடிய கன மழை பெய்தது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 528 ஏரிகள் உள்ளன. இதில், பெரிய ஏரிகளான மதுராந்தகம், பொன்விளைந்தகளத்தூர், கொளவாய், கொண்டங்கி, பாலூர், மானாம்பதி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, அணைக்கட்டு, செய்யூர், லத்தூர் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.

கடந்த வாரம் பெய்த கன மழையில் 100 சிறிய ஏரிகள் நிரம்பின. தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திம்மாவரம், நீஞ்சல்மடு அணை நிரம்பி வழிவதால் உபரிநீர் பாலாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. காட்டாங்கொளத்தூர், ரெட்டிப்பாளையம், கரும்பாக்கம் அருகேயுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ள நீர் செல்வதால் கடந்த 10 நாட்களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஈசூர், வாயலூர் பாலாற்று தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது.

பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், கத்திரி, வெண்டை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 300 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மால்லபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

Tags : Kanchipuram ,Chengalpattu District , Normal life of people affected in Kanchipuram, Chengalpattu district due to continuous rains: relief camps on standby
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...