குலசேகரம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் சாரல் மற்றும் கனமழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் கனமழை நீடித்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள 536 கன அடி தண்ணீர் உபரிநீரும், சிற்றார்1ல் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் 150 கன அடி தண்ணீரும் கோதையாற்றில் கலப்பதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வற்றாத கோதையாறு திற்பரப்பு பகுதியில் அருவியாக விழுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்குள்ள தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 28ம்தேதி முதல் திற்பரப்பு அருவியில் மக்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அங்கு செல்லாதவாறு கயிறு கட்டி தடுக்கப்பட்டுள்ளது. 15 நாட்களாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறையாத நிலையில், இன்றும் தடை தொடர்கிறது. கோதையாற்றின் தடுப்பணையில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவி மக்கள் கூட்டம் இன்றி காணப்படுகிறது. இருப்பினும் குற்றால சாரல் சீசனையொட்டி திற்பரப்பில் குளுகுளு சூழல் காணப்படுகிறது. அருவியில் குளிக்க தடை இருந்தாலும் சிலர் குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காக திற்பரப்பு பகுதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதையும் காணமுடிகிறது.