கால்பந்தாட்ட வீராங்கனைக்கு தவறான சிகிச்சையா? நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மீனம்பாக்கம்: கால்பந்தாட்ட வீராங்கனைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சிங்கப்பூரில் நடந்த உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று விட்டு, நேற்றிரவு 11.45 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சிங்கப்பூரில் உலக சுகாதார அமைப்பின் மாநாடு நடந்தது. இதில் உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்கள்  உட்பட பல்வேறு நிபுணர்கள் கலந்து கொண்டு சுகாதார நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள்.

கடந்த 8ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை தொடங்கி வைத்து, கொரோனா பேரிடர் கால தடுப்பு நடவடிக்கை, தொற்று நோய்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும், பல்வேறு வைரஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. அதிலும் தமிழகத்தின் கருத்துகளும் சிறப்பாக எடுத்து சொல்லப்பட்டது. பேரிடர் புதிய வைரஸ் போன்றவை பரவும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் கொசு ஒழிப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொசு மருந்து அடித்தல், புகை அடித்தல் போன்றவைகள் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி, மலேரியா ஒழிப்பு துறை ஆயிரக்கணக்கான ஊழியர்களை வைத்து அப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மழை காரணமாக கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா பரவுகின்றன. அவை பரவுவதை தடுப்பதற்காகதான், மக்களுக்கு கொசுவலை வழங்கப்படுகிறது. இதை குறிப்பிட்ட சதவீதத்தினர் கேலி செய்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் இதை வரவேற்கின்றனர். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கால்பந்து வீராங்கனையான கல்லூரி மாணவிக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேல் சிகிச்சைக்காகதான் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு, கல்லூரி மாணவியை அனுப்பி வைத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் என்னிடம் கூறினர். அரசு மருத்துவமனைகளில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், தவறான சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதாக கருத்துக்களை பரப்புகின்றனர். இது சரியானதல்ல. மருத்துவர்கள் ஆத்மார்த்தமாகத்தான் பணியாற்றுவார்கள். யாரையும் பாதிக்கும் விதத்தில் பணியாற்ற மாட்டார்கள். இருந்தபோதிலும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரை ஒதுக்கி தள்ளாமல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: