×

கோவை பஸ்நிலையத்தில் சிக்கிய ரூ.80 லட்சம் ஹவாலா பணமா?

கோவை: கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் நேற்று காட்டூர் போலீசார் சோதனை செய்தனர். பஸ்சில் இருந்து இறங்கி வாலிபர் ஒருவர் பேக் எடுத்து சென்றார். அவரின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த போலீசார் சோதனையிட்டனர். அதில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அவரை காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தனது பெயர் குமார் (35) என்றும், கரூரில் ஒரு நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பாளராக வேலை செய்வதாக தெரிவித்தார்.

திருப்பூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து 80 லட்சம் ரூபாய் வாங்கி பேக்கில் வைத்து கோவை வந்ததாகவும், காந்திபுரத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். அவர் வைத்திருந்த பணத்திற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. போலீசார் கணக்கிட்டு பார்த்த போது 80 லட்சம் ரூபாய் இருந்தது. இந்த பணம் தொடர்பாக கோவை வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இந்த பணத்தை வருமான வரித்துறை வசம் ஒப்படைத்தனர்.

இதற்கான ஆதாரம் கேட்டு வருமான வரித்துறையினர் விசாரிக்கின்றனர். எந்த பணிகளின் மூலமாக இந்த பணம் பெறப்பட்டது, இதை யாரிடம் ஒப்படைக்க போகிறீர்கள், இதற்கான ஆதாரம் எங்கே என வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது ஹவாலா பணமா?, ரகசியமாக யாரிடமாவது ஒப்படைக்க அனுப்பி வைக்கப்பட்டதா? எனவும் விசாரணை நடக்கிறது.

Tags : Is Rs.80 lakh hawala money stuck in Coimbatore bus station?
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...