×

பீகாரில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தில் பழ வியாபாரி உட்பட 6 பேர் விஷம் குடித்து தற்கொலை: தற்கொலை குறிப்பு கடிதத்தில் பகீர் தகவல்

நவாடா: பீகாரில் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாததால் பழ வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் நவாடா நகரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பீகார் மாநிலம் நவாடா பகுதியில் வாடகை வீட்டில் பழ வியாபாரி கேதர் லால் (50), அவரது மனைவி அனிதா தேவி (47), மகள்கள் ஷப்னம் குமாரி (20), குடியா குமாரி (17), சாக்ஷி குமாரி (15), மகன் பிரின்ஸ் (16) ஆகியோர் வசித்து வந்தனர். கேதர் லாலின் பழ வியாபார தொழில் நலிவடைந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கந்து வட்டிக் காரர்களிடம் ரூ. 12 லட்சம் கடன் வாங்கினார். தொடர்ந்து பழ வியாபாரம் செய்து வந்த நிலையில், தான் வாங்கிய கடனை உரிய நேரத்தில் அவரால் செலுத்த முடியவில்லை. கந்துவட்டிக்கு வாங்கிய கடன் என்பதால் பல மடங்கு வட்டி அதிகமானது.

அசலையும் செலுத்த முடியாமல், வட்டியையும் செலுத்த முடியாமல் கேதர் லால் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் கேதர் லால் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சோபியாபர் என்ற இடத்திற்கு அனைவரையும் அழைத்து சென்றார். அங்கு சென்றதும் கேதர் லால் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்த போலீசார் கேதர் லால் உட்பட 6 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நவாடா நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் குமார் சிங் கூறுகையில், ‘நவாடா நகரின் விஜய் பஜார் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக கேதர் லால் பழக் கடை நடத்தி வந்தார்.

நலிவுற்ற தனது தொழிலை மேம்படுத்துவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கந்துவட்டிக்காரர்களிடம் ரூ. 12 லட்சம் கடன் வாங்கினார். அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இருந்தும் கந்துவட்டிக் காரர்கள் அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு வட்டிக்காரர்களில் இருவரை கைது செய்துள்ளோம். மீதமுள்ள நான்கு குற்றவாளிகளை தேடி வருகிறோம். கேதர் லாலின் வீட்டில் இருந்து தற்கொலை குறிப்பு கடிதம் கிடைத்துள்ளது. அதில், ‘எனக்கு கடன் கொடுத்த கந்துவட்டிக்காரர்களிடம் வாங்கிய கடனை விட இரண்டு மடங்கு பணத்தை திருப்பிச் செலுத்தி விட்டேன்.

வாங்கியத் தொகையை முழுமையாக வட்டியுடன் திருப்பிச் செலுத்த கூடுதலா ஆறு மாத கால அவகாசம் கேட்டேன். அவர்கள் என்னுடைய கோரிக்கையை நிராகரித்து விட்டனர். மேலும் என்னை மிரட்டினர். அதனால் குடும்பத்துடன் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். பணக்காரர்கள் இந்த சமூகத்தின் அட்டைப் பூச்சிகள்; அவர்கள் இந்த சமூக அமைப்பை அழிக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி, மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று கூறினார்.


Tags : Bihar ,Bakir , In Bihar, 6 people, including a fruit seller, committed suicide due to usury in the same family: Bakhir informs in suicide note letter
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!